சினிமா

'குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி’: மோகன்லால் வெளியிட்ட புகைப்படம்

'குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி’: மோகன்லால் வெளியிட்ட புகைப்படம்

sharpana

'த்ரிஷ்யம் 2' படத்தின் ஷூட்டிங் போட்டோவை  முதன்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்லால் பகிர்ந்துகொண்டுள்ளார். ’குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி’ என்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் , மீனா, ஆஷா சரத் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கேரளா மட்டுமல்லாது  உலகம் முழுக்க வெளி்யாகி 500 மில்லியன் குவித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை த்ரிஷ்யம் பெற்றது. அதோடு சீனாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற சாதனையும் படைத்தது.

இதன் வெற்றியால், தெலுங்கில் ஸ்ரீ ப்ரியாவும், கன்னடத்தில் பி.வாசுவும், இந்தியில் நிஷிகாந்த் காமத்தும், தமிழில் ஜீத்து ஜோசப்புமே ரீமேக் செய்திருந்தார்கள். கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ல் ’பாபநாசம்’ என தமிழிலும் வெளியாகி வெற்றியடைந்தது. மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காவல்துறை அதிகாரியின் மகனை கொலை செய்துவிட்டு நாயகன் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. இதனை த்ரில்லரோடு ஃபேமிலி சென்ட்டிமெண்ட் கலந்து கொடுத்ததால் எல்லா மொழியிலுமே ஹிட் அடித்தது.

இப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் கடந்த ஆண்டு கார்த்தி,ஜோதிகா,சத்யராஜ் நடிப்பில் ’தம்பி’ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ராம் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் ஜீத்து ஜோசப். ஆனால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாட்டில் எடுக்கவுள்ளதால் கொரோனாவில்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், கேரளாவிலேயே த்ரிஷயம் 2 படத்தை எடுக்கத் திட்டமிட்டு கடந்த மாதம் முதல் ஷூட்டிங் நடந்து வருகிறது. த்ரிஷ்யம் படப்பிடிப்பு நடந்த தொடுபுழாவிலேயே த்ரிஷ்யம் 2 படத்தையும் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.