நடிகர் வடிவேலுவை எந்தத் தயாரிப்பாளரும் தங்களது திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் எனத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' திரைப்படம் தொடங்கப்பட்டது. சிம்புத்தேவன் இயக்கத்தில் இந்தப் படத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டன. ஆனால், இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால், படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர், வடிவேல் மீது புகார் அளித்தார்.
இதனையடுத்து, படிப்பிடிப்பில் தொடர்ச்சியாக வடிவேலு கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரங்குகள் அமைக்க செலவான தொகையினையும், முன்பணமாக பெற்ற தொகையினையும் திரும்ப வழங்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. ஆனாலும், வடிவேலு தரப்பு சரியான பதில் தெரிவிக்காததால் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்னை தீரும் வரை வடிவேலுவை வைத்து எந்தத் தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் சங்கம் வாய்வழியாக அனைத்து தயாரிப்பாளருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.