திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறப்பால் நாளை விடுமுறை என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் மறைவிற்கு பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலின் சாகப்தம், எழுத்தின் சகாப்தம், தலைமையின் சகாப்தம்” மறைந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜா, “தமிழகம் தலைசிறந்த தலைவரை இழந்துவிட்டது. நமது மக்களும், நமது தமிழும் கலைஞர் கருணாநிதியை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், “தலைசிறந்த தலைவர் மற்றும் தமிழ் எழுத்தாளர் கருணாநிதி ஐயா ஆன்மா சாந்தி அடையட்டும். எப்பொழுதும் அவர் நினைவில் இருப்பார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், “வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!” என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத், “புகழ்பெற்ற சகாப்தம் முடிந்தது. இதயப்பூர்வமான இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், “திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், 5 முறை முதலமைச்சர், 60 ஆண்டுகளாக அரசியல் தலைவர், தமிழக அரசியலின் பிதாமகன், திராவிடத்தின் பெருமிதம் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் அனைத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.