சினிமா

”பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’ மிக அழுத்தமான படம்” - வெற்றிமாறன்

”பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’ மிக அழுத்தமான படம்” - வெற்றிமாறன்

sharpana

பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்கள் பாராட்டியுள்ளார்.

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் தயாரிப்புக்குப்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ’ரைட்டர்’ டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார். காவல்துறை கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை வரவேற்பைப் பெற்றதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு படத்தின் சிறப்புக் காட்சியை திரைப்படத்துறையினருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் சத்யம் சினிமாவில் திரையிட்டுக் காட்டினர். இதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி பேசும்போது, “ரைட்டர் அற்புதமான படம். நிஜமான பிரச்சனைகளை கையாள்வதில் இந்தியளவிலேயே தமிழ் சினிமாதான் சரியாகக் காண்பிக்கிறது. படக்குழுவினருக்கு தலைவணங்குகிறேன். சமுத்திரக்கனி, இனியா, ஹரி என ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்துள்ளனர். ரைட்டர் பெரிய ஹிட் ஆகும்” என்று உற்சாகமுடன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், ”ரைட்டர் ரொம்ப அழுத்தமானப் படம். ரொம்பநாளாக விவாதிக்கக்கூடிய பேசாமலேயே இருந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். யாரோ ஒருவர் இதனை படமாக எடுத்து விவாதத்துக்குள்ளாக்கியதற்கே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. காவல்துறையினரின் வலிகள், மன அழுத்தத்தை பேசுகிறது” என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்,

“சமுத்திரக்கனி சார் திரை வாழ்க்கையில் ‘ரைட்டர்’ முக்கியமானதொரு படம். அவரை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டுச் செல்லக்கூடியப் படம். இயக்குநர் ஃப்ராங்க்ளினின் உழைப்பு மிகப்பெரியது. ரொம்ப எமோஷனலானப் படம். சின்னதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டால் கூட வேறொரு இடத்திற்குச் சென்றுவிடும். சமுத்திரக்கனி சாரின் உழைப்பு அபரீதமானது. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர்” என்றார். ‘ரைட்டர்’ படத்தை இயக்குநர்கள் பாராட்டிய வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.