பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விடுதலை’ பாகம் 1.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும், சூரி அவரை விரட்டிப்பிடிக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாகவும் விடுதலை பாகம் 1 படத்தின் கதை அமைந்திருக்கும். முதல் பாகம் முழுவதையும் தனியொரு ஆளாக தோளில் சுமந்திருந்த சூரியின் நடிப்பு, இரண்டாம் பாகத்திற்கு தேவையான தாக்கத்தை கச்சிதமாக கொண்டுவந்து முடிவில் சேர்த்திருக்கும். அவரின் அசத்தலான நடிப்பு ரசிகர்கள் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
வெற்றிமாறனின் கதை நகர்வு, சூரியின் மிரட்டலான நடிப்பு, விஜய் சேதுபதியின் ஸ்கிரீன் பிரதிபலிப்பு ஒருபுறம் என்றால், அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அமைந்திருந்த இளையராஜாவின் இசையும், பாடல்களும் படத்தை உயரத்தில் தூக்கிப் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமைந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் நீட்சியாக ”விடுதலை 2” திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விடுதலை 2 படத்தின் உருவாக்கம் குறித்தும், ஒடிடி தளத்தில் வெளியீடு குறித்தும், இருவேறு வெர்சன்களில் படம் இருவேறு விதமாக வெளியிடப்பட்டது குறித்தும் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் வெற்றிமாறன், படத்தின் உருவாக்கம் எப்படி இருந்தது, கடைசிநேரத்தில் 8 நிமிடங்கள் கட் செய்யப்பட்டது, கட் செய்யப்படாத படம் ஒரு இடத்திலும் கட் செய்யப்பட்ட படம் வேறொரு இடத்திலும் வெளியிடப்பட்டதாகவும், விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 சேர்த்து 8 மணி நேர திரைப்படம் இருப்பதாகவும், அது ஒடிடி தளத்தில் பல பாகங்களாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலை 2 வெளியீட்டுக்கு பிறகு வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வெற்றிமாறன், “கடைசி நேரத்தில் படத்தின் சில நிமிடங்கள் கட்செய்யப்பட்டது, அது ஒரு டைரக்டராக என்னுடைய முடிவுதான். இதுமட்டுமல்ல அனைத்து கட்களும் பெரும்பாலும் டைரக்டரான என்னுடைய கட்டாகதான் இருக்கும், வெளியிலிருந்து வரும் அழுத்தங்களால் நான் எதையும் செய்வதில்லை.
இரண்டாம் பாகத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாக ஒரு மணிநேர படம் அதிகமாகவே இருக்கும். அது அனைத்தும் வெளியிடப்படும். எங்களால எவ்வளவு முடியுமோ அவ்ளோ படமா எடுத்துவச்சிருக்கோம், தியேட்டர் வெர்ஷன், திரைப்பட விழாக்களுக்குத் தனி வெர்ஷன் எனப் பல வெர்ஷன் பண்ணி வச்சிருக்கோம். சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முதல் பாகம் 4 மணி நேரமும், இரண்டாம் பாகம் மூன்று மணி நேரமும் என ஒட்டுமொத்தமாக 8 மணி நேர படம் உள்ளது. அதுனால ஒடிடி தளத்தில் நான்கு பாகமாக கூட எங்களால வெளியிட முடியும். கண்டிப்பா எல்லாமே எக்ஸ்டென்டடு வெர்சனா வெளியிடப்படும்.
வெளிநாட்டுக்கு முன்பே படத்தை அனுப்பிவிட்டதால் அங்கு ஒரு வெர்சனாகவும், இங்கு கட்செய்யப்பட்டு சரிபட்ட ஒரு வெர்சனாகவும் வெளியிடப்பட்டுள்ளது. ஓடிடி-யில் கூடுதலாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டு வேறு ஒரு வெர்ஷன் வெளியிடப்படும்” என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.
விடுதலை 2 பாகம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.