நாக சைதன்யா, வெங்கட் பிரபு
நாக சைதன்யா, வெங்கட் பிரபு File image
சினிமா

‘வாரிசு’ பட தயாரிப்பாளரை அக்கட தேசத்திலேயே கலாய்த்த வெங்கட் பிரபு!

சங்கீதா

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

கொரோனா காலக்கட்டத்தில் ஓ.டி.டி.யின் மூலம் தங்களது மொழிப் படங்களையும் தாண்டி பல்வேறு மொழி படங்களுக்கும் சினிமா ரசிகர்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தனர். அதிலும் இந்தியாவில், தென்னிந்தியப் படங்களுக்கான வரவேற்பு என்பது சற்று அதிகரித்தே காணப்பட்டது. ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்’ போன்றப் படங்களால் தற்போதும் வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், தமிழின் முன்னணி நாயகர்களை வைத்து இருமொழி படங்களை தயாரிப்பதும், தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு படங்களை இயக்குவதும் அதிகரித்து காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கலன்று வெளியான ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘பைட் வேணுமா பைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு...’ என்று தயாரிப்பாளர் தில் ராஜூ மேடையில் பேசியது வைரலானது மட்டுமின்றி, மீம் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய கன்டன்ட்டாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இருமொழி சினிமா ரசிகர்களும் தில் ராஜூவின் இந்தப் பேச்சை ரசிக்கவே செய்தனர்.

இந்தநிலையில், அதனை கலாய்க்கும் விதமாக, ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ ப்ரீ ரிலீஸ் விழாவில், இயக்குநர் வெங்கட் பிரபு, தில் ராஜூவின் பேச்சை தமிழும், தெலுங்கும் கலந்து இமிடேட் செய்து பேசியது வைரலாகி வருகிறது. விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “எனக்கு தெலுங்கு மொழி சரளமாக பேச வராது. இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி. ஆக்ஷன் வேணுமா, ஆக்ஷன் உந்தி. ஃபர்பார்மன்ஸ் வேணுமா, ஃபர்பார்மன்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா, ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ, எல்லாம் உந்தி” என்று பேசினார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. மேலும் நாக சைதன்யாவால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த காட்சிகளும் நடந்தன. பின்னர் நாக சைதன்யா சைகை காட்டியதும், “மாஸ் வேணுமா, மாஸ் உந்தி” என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் வருகிற 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுக்கு இது முதல் தெலுங்குப் படமாகும். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன், அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.