தமிழ் சினிமாவை 20 வருடங்கள் தாங்கிப் பிடித்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா என்று இயக்குனர் வேலுபிரபாகரன் கூறினார்.
வேலு பிரபாகரன் இயக்கி நடித்துள்ள படம், ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’. இளையராஜா இசை அமைத்துள்ளார். சுரேஷ் இன்விசிபிள் இன்னோவேஷன்ஸ் சார்பாக சுரேஷ்குமார் தயாரித்துள்ளார். இதன் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது வேலு பிரபாகரன் பேசியதாவது:
இதுக்கு முன்னால, ’வேலு பிரபாகரனின் காதல் கதை’ங்கற படத்தை எடுத்தேன். அந்தப் படத்தை ஆபாச படம்னு சொல்லிட்டாங்க. நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் அப்படித்தான் சொன்னாங்க. அந்தப் படத்துல ஒரு பாலியல் விஷயத்தை சொல்ல வேண்டியிருந்தது. 50 கோடி, ஐநூறு கோடிக்கு படம் எடுத்து மக்களிடம் காட்டும்போது என்னை மாதிரி எளியவனும் மக்களை கவரணும் இல்லையா? அதனால கொஞ்சம் கிளாமரா எடுத்தேன். அதை பாலியல் சார்ந்த படம்னு சொல்லிட்டாங்க. அதனால என் படத்துல நடிக்கிறதுக்கே இமேஜ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, பெரிய உயரத்துல இருக்கிற இளையராஜா என்கிற மகத்தான மனிதன் என் படத்துக்கு அங்கீகாரம் கொடுத்தார். அவர், நம் ஆதி விதை. அப்படித்தான் நான் பார்க்கிறேன். அவரிடம் மிகப்பெரிய நேர்மை இருக்கு. நான் பார்த்து, யாரிடமும் நடிக்காதவர் அவர். அவர் சிந்தனை நேர்மையானது. உண்மையானது.
இளையராஜா இசை அமைக்க வந்த காலம் மிகப்பெரிய இருண்ட காலம். அப்பதான் முழுத் திரையுலகை 20 வருஷம், தன் பாடல்கள் மூலமாகப் பாதுகாக்கிறார் அவர். இப்ப பழைய படங்களைப் பார்த்தா, ரொம்ப கேவலமா இருக்கும். இது எப்படினா ஓடுச்சுன்னு பார்த்தா, அதுக்கு காரணம் இளையராஜாவின் பாடல்கள். இந்த மாதிரி மனிதனை எந்தக் காலத்துலயும் வதைக்கக் கூடாது. அப்படியொரு மகத்தான மனிதன் அவர்.
இவ்வாறு கூறினார்.
விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, பாடலாசிரியர் சினேகன், ஹீரோயின் பொன்.ஸ்வாதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.