ரிதன்யா மரணம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் pt
சினிமா

”ரிதன்யாவின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது..” - இயக்குநர் வசந்தபாலன் ஆதங்கம்

வரதட்சணைக் கொடுமையால் உயிரைவிட்ட ரிதன்யாவின் அழுகுரல் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பதாக இயக்குநர் வசந்தபாலன் எமோசனலாக பதிவிட்டுள்ளார்.

Rishan Vengai

திருப்பூர் அருகே `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இறப்பதற்கு முன் கண்ணீர் மல்க ரிதன்யா பேசிய ஆடியோ கேட்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் விதத்தில் இருந்தது. மனதளவிலும் உடலளவிலும் வேதனையை அடைந்துவிட்டதாகவும், இனிமேல் வாழ விருப்பமில்லை எனவும் ரிதன்யா பேசியது, மகளை இழந்து தந்தை மற்றும் தாய் வேதனையில் கதறுவதெல்லாம் பெண் மீதான சமூகத்தின் அடக்குமுறை இன்னும் மாறவேயில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

ரிதன்யா தற்கொலை

இந்நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யா குறித்து எமோசனலாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

ரிதன்யாவின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது..

பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் இயக்குனர் வசந்தபாலன்,

ரிதன்யாவின் அழுகுரல் இரவெல்லாம் ஒரு ஒப்பாரிப்பாடலாய்கேட்டுக் கொண்டேயிருந்தது.இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

பெண்ணை புரிந்தே கொள்ளாதநூற்றாண்டுகால ஆணாதிக்கம்,எல்லோருடைய குடும்பங்களிலும்நீண்ட கால வடுவைப்போல,ஒரு மச்சம் போல ஒட்டிப் பிறக்கிறது

பெண் (ரிதன்யா) மீது செலுத்தப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள், ஆணின் அளவுக்கதிகமான பாலியல் வெறியை,பாலியல் வறட்சியைபாலியலை ஒட்டி உருவாக்கப்பட்ட அதீத அழகியலை, பெருங்கனவை வெளிக்காட்டுகிறது.

ரிதன்யா தற்கொலை

ரிதன்யா வழக்கை வரதட்சணைக் கொடுமை,தற்கொலை என்ற பார்வையில் சுருக்கி விடுதல் குறுகியப் பார்வை.

ரிதன்யாவிற்கு உயர் கல்வி வரை கற்று தந்த கல்விக்கூடங்களும்,கல்வி முறையும் திருமணமாகி 78 நாட்கள் கூட வாழ்க்கையை வாழ முடியாத, எதிர்கொள்ள முடியாத தரத்தில் தான் கல்வி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

கல்விக்கூடங்கள் என்பதே உலகின் மினியேச்சர் தானே.

பூமி வெடிப்பு உண்டானது முதல் ,மனிதன் உருவானது வரையான பரிணாம வளர்ச்சி பற்றி,மனிதக்குழுகள் தோற்றம் முதல் குடும்ப அமைப்புகள் உருவானது வரை என வரலாறு,சமூகம்,மொழி,இலக்கியம்,அறிவியல் என பலவேறு துறை சம்மந்தப்பட்ட பாடங்களைக் கற்று தந்து, வாழ்வைப் பற்றிய பயத்தைப் போக்கி வானில் தன்னந்தனியாக பறக்க கற்றுத் தருவதேகல்விக்கூடங்களின் முதலாய முக்கியப் பணி.

ஆனால் யதார்த்தம் என்ன? தேர்வுக்கு மட்டுமே/ மதிப்பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் என்ற பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றனர்.

பெண் பற்றிய புரிதலைச் சொல்லி தராத கல்வி,தேர்வுத் தோல்வியே தாங்கமனபலம் சொல்லித் தராத கல்வி,தேர்வை விட வாழ்க்கை அழகானது என்று சொல்லித் தராத கல்வி மற்றும் சமூகம் என இதன் தொடர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

கல்வி கற்ற மேம்பட்ட சமூகத்தின் ஆணிவேரில் நோய் கண்டுள்ளது.

பணம் ஈட்ட நமக்கு கல்வியறிவு உள்ளது.அதற்கு நமக்கு பயிற்சியிருக்கிறது. கோடிகள் செலவழித்து திருமணம் நடத்த நமக்கு பலம் இருக்கிறது.

ஆனால் பெண்ணை/மகளைப் புரிந்து கொள்ள நமக்கு படிப்பில்லை,அனுபவமில்லை...பக்குவமில்லை.. பொறுத்துப்போ என்று தொடர்ந்து குரல் கொடுக்கிற குடும்பமைப்புகளின் பலவீனங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

முதலிரவில் பெண்ணைப் பலிக்கொடுக்கிற திருமணயமைப்பை நாம் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு திருமண வயதான ஆணும் பெண்ணும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆண்கள் பெண்ணுடலைப் புரிந்து கொண்டவர்களா? பெண்ணின் மீது மரியாதை கொண்டவர்களா? என்பதற்கு பதில் இல்லை இல்லை இல்லையென்பது பெண் மீதான தொடர் பாலியல் குற்றங்களைக் காண்கையில் உறுதியாகிறது.

பெண்ணை இன்னும் போகப்பொருளாக தின்பண்டமாக மாற்றி வைத்திருக்கிற கல்வி,கலை,திரைப்படம்,சமூகம் என அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும்.

பொது சமூகத்தில் பெரும் விவாதம் நடந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணுதல் சாத்தியம்.

பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடுஎல்லா தனியார், அரசு துறைகளிலும், அரசியல் கட்சிகளிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.சட்டமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.அப்போது தான் பெண்களின் பார்வை,பெண்ணின் குரல்,பெண்ணின் துயரம் எட்டுதிக்கிலும் உரத்து ஒலிக்கும்.

இது ஒருவரையொருவர்கைகோர்த்து செய்யவேண்டியகூட்டு நடவடிக்கை.

மொத்த சமூக,கல்வி ,அரசியல் மாற்றமே இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க இயலும்.

வெறுமனே விரைவு உணவு போல விரைவு நீதியாக இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் தண்டித்து விட்டு கடந்து போனால் மீண்டும் மீண்டும் பெண்கள் பாலியல் சூறையாடலுக்கு உள்ளாக நேரிடும்.நாளைக்கு நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் போது மட்டும் அழுது கதறி ஒரு பயனும் விளையப்போவதில்லை” என்று எமோசனலாக பதிவிட்டுள்ளார்.