சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ அக்டோபரில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர். சி தற்போது இயக்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்தன. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் இறுதி சண்டைக் காட்சி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. மேலும் இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை கடந்த ஆறு மாதங்களாக படக்குழுவினர் உருவாக்கி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை வரும் அக்டோபர் மாதம் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஆர்யா - விஷாலின் ’எனிமி’படமும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபரில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தகக்து.