இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10-ம் தேதியான இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவரின் நிஜக் கதையை மையமாக எடுத்துக்கொண்டு இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதையெழுதியுள்ளார்.
ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலை ஒட்டி தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி சில நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், சமீபத்தில் தன்னை அதிகம் கவர்ந்த திரைப்படங்கள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பேசியுள்ளார்.
பெரிய ஆரவாரம், ப்ரமோஷன்கள் எதுவும் இன்றி கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியான 'லப்பர் பந்து' திரைப்படமானது, ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. திரையரங்கில் குறைவான ஸ்க்ரீன்களுடன் வெளியான இத்திரைப்படம், பின்னர் ரசிகர்களின் பெருமித்த ஆதரவால் மெயின் ஸ்ட்ரீம் திரைப்படமாக திரையரங்கில் மாறி வசூலில் பட்டையை கிளப்பியது.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியிருந்த லப்பர் பந்து திரைப்படத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலசரவணன், ஜென்சன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் பாராட்டப்பட்ட நிலையில், கெத்து கதாபாத்திரத்தில் நடித்த தினேஷின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்களும் கொண்டாடினர். திரையுலகினர் தாண்டி கிரிக்கெட்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் படத்தை அதிகப்படியாக பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல்களில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர் லப்பர் பந்து படம் குறித்தும், தினேஷ் நடிப்பு குறித்தும் மனம்திறந்து பாராட்டியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “சமீபத்தில் நான் பார்த்த வியந்த ஒரு நடிப்பு லப்பர் பந்து படத்தில் தினேஷின் அற்புதமான நடிப்பு. அவரிடம் யாருடைய சாயலும் இல்லை, அலட்டிக்காம நடிக்கிறாரு, எப்படி இவரால இப்படி நடிக்க முடியுதுனு ஆச்சரியப்பட்டேன், சொல்லப்போனா அவர் நடிக்கிறாரா என்ற சந்தேகமே எழுந்தது, அப்படி இருந்தது அவருடைய பர்ஃபாமன்ஸ். தூக்கிவச்சு கொண்டாட வேண்டியவர் தினேஷ், அவர்கூட எல்லாம் படம் பண்ணனும்னு ஆசை இருக்கு” என்று பேசியுள்ளார்.