துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன முதலிய ஹிட் திரைப்படங்களை இயக்கியதற்கு பிறகு தமிழ்திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருமாறினார்.
2013-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அவர், அதற்குபிறகு 2019-ம் ஆண்டு என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் எதுவும் சரியாக செல்லாத நிலையில், அவருடைய சகோதரரான நடிகர் தனுஷை வைத்து கடந்த 2022-ம் ஆண்டு நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அந்த படமும் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத்தந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒரு படத்தை எதிர்ப்பார்ப்பதாகவும் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை எடுங்கள் எனவும் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துவருவதை வாடிக்கையாக கொண்டுவருகின்றனர்.
படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர், விஜயின் பீஸ்ட் திரைப்படம் தொடங்கி தற்போதைய ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் வரை பல திரைப்படங்களில் நடித்துவந்தார்.
இந்நிலையில், மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன கூட்டணியை மீள் உருவாக்கம் செய்யும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து படம் செய்யவிருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புதிய அப்டேட் ஒன்றை பதிவிட்டிருக்கும் செல்வராகவன், செல்வராகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தினை பேரல்லெல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்வராகவனின் பதிவை ரீ-ட்வீட் செய்திருக்கும் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார், ஆயிரத்தில் ஒருவன், மயக்கமென்ன திரைப்படங்களுக்கு பிறகு புதிய திரைப்படத்தில் இணையவிருப்பதாக தெரிவித்துள்ளார்.