மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம்
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுக்கப்போவதாக கூறிய இயக்குநர் ஆர்கே செல்வமணி
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2-ன் ஹீரோ யார் என்பதை குறிப்பிட்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி
தமிழ் திரையுலகில் ஒரு நடிகருக்கு 100-வது படம் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமைந்ததெல்லாம் விஜயகாந்த் என்ற ஒருவருக்கு மட்டுமே இன்று வரை நடந்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு ஆர்கே செல்வணி இயக்கத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் 100-வது திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் விஜயகாந்த் உடன் சேர்ந்து சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர்.
இந்த படத்திலிருந்து தான் விஜயகாந்திற்கு ’கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. அதுவரை இப்படியான கதைக்களத்தில் ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை தமிழ்திரையுலகம் காணாமல் இருந்தது. கேப்டன் பிரபாகரன் வெளியான போது ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டது.
உடன் இசைஞானி இளையாராஜா இசையில் பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா பாடல்கள் எல்லாம் அனைத்து திசையிலும் ஒலித்தன. இறுதிக்காட்சியில் விஜயகாந்த் பேசும் கோர்ட் வசனத்திற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இப்படி தமிழ் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிபடமான கேப்டன் பிரபாகரன் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கும் நிலையில், படத்தை புதிய பொலிவில் மீண்டும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்தின் மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன், 4கே தரத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் மறுவெளியீட்டை காணவும் ரசிகர்கள் இன்று திரையரங்கில் குவிந்தனர். முதல் காட்சி பெரும்பாலான திரையரங்கில் ஹவுஸ்புல் ஆன நிலையில், படத்தின் மறுவெளியீட்டுபிறகு இயக்குநர் ஆர்கே செல்வமணி செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “34 ஆண்டுகளுக்கு பிறகு இன்னைக்கு கேப்டன் பிரபாகரன் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கு, ஏதோ இப்போது வெளியான திரைப்படம் போல மக்கள் மிகுந்த வரவேற்பும், ஆரவாரமும் கொடுக்கிறாங்க. 34 வருசத்துக்கு முன்னர் எந்த காட்சிக்கும், வசனத்திற்கும் கை தட்டினார்களோ அதேபோல் தற்போதும் கைதட்டுகிறார்கள். பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா பாட்டுக்கெல்லாம் எழுந்து டான்ஸ் ஆடுறாங்க. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்குறது பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு.
இப்ராஹிம் ராவுத்தரும் கேப்டனும் இல்லையென்றால், இந்த படமே இல்லை. அப்போது பிறக்காத குழந்தைகள் எல்லாம், தற்போது படத்தை பார்த்து ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ராவுத்தரும் கேப்டனும் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும், பரவாயில்லை அவர்களின் ஆசி எங்களுக்கு எப்போதும் இருக்கிறது.
நான் ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி செம்மரக்கடத்தல மையப்படுத்தி கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுக்கலாம்னு யோசிச்சன். ஆனால் அப்போது புஷ்பா திரைப்படம் எடுக்கப்பட்டதால நான் நிறுத்திட்டன். புஷ்பா திரைப்படத்திலும் கேப்டன் பிரபாகரன் படத்தில் இருப்பது போலான காட்சிகள் இருக்குனு பலபேர் சொன்னாங்க, கதைக்களம் ஒன்று என்பதால் எங்க படத்தை பார்த்துதான் அவர்களும் செய்துள்ளார்கள் என நான் சொல்ல விரும்பல.
ஆனால் கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுக்க அப்போது எனக்கு விஜயகாந்த் போல ஒரு நடிகர் கிடைக்கல. இப்போது சண்முக பாண்டியனின் புதிய படத்தை பார்த்தேன், விஜயகாந்திடம் இருந்த அதே நடிப்பு திறமை அவரிடமும் இருக்கிறது. உங்களுடைய எல்லோரின் ஆதரவும் இருந்தால் நிச்சயம் நான் சண்முக பாண்டியனை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 படத்தை இயக்குவேன்” என்று பேசியுள்ளார். இது கேப்டன் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக கிடைத்துள்ளது.