சினிமா

’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்!

webteam

’’சிவா மனசுல சக்தி படத்தை பிரமாண்டமாக பண்ணினால் எப்படியிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர்.லோக்கல்’’ என்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

’வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், ’மிஸ்டர். லோக்கல்’. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

எம்.ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, ’’இந்தக் கதையை சிவகார்த்திகேயன் ஓகே பண்ணுவதற்கு நயன்தாராதான் காரணம். ஏனென்றால் ஹீரோயின் கேரக்டர் பவர்புல்லானது. அந்த கேரக்டரில் நடிப்பவரைப் பொறுத்துதான் படமே இருக்கு என்றார் சிவா. இருவரும் 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருந்தாலும் அதில் இருவருக்குமான காம்பினேஷன் குறைவு.

இந்தப் படத்தில் படம் முழுக்க இரண்டு பேரும் வருவார்கள். நான் இயக்கிய ’சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாக்கி னால்  எப்படி யிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர். லோக்கல்’. ’எஸ்.எம்.எஸ் 2.0’ என்றும் சொல்லலாம். ஆனால் கதை வேறு வேறு. 

லோக்கல் பையன் என்பதை மரியாதையாகச் சொன்னால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. அதுதான் டைட்டில். நயன்தாராவுடன் தம்பி ராமையா படம் முழுவதும் வருவார். அதோடு நிறைய காமெடியன்கள் இருக்கிறார்கள். ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவோடு பணிபுரிந்திருக்கிறேன். இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பதற்கு அவரது கடின உழைப்புதான் காரணம்’’ என்றார்.