முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ மூலம் இயக்குநராக சினிமாவில் பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த ராஜமௌலி, ஜென்ஸி அதிரடி, சாகசம், பொழுதுபோக்கு கலவையைப் புகழ்ந்து, அக்டோபர் 2 வெளியீட்டை தவறவிட வேண்டாம் என ரசிகர்களிடம் கூறினார்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் தலைவராக மாறியிருக்கும் சூழலில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தசூழலில் தான் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக 'சிக்மா' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
ஒரு ஆக்ஷன் - அட்வென்ச்சர் படமாக உருவாகியுள்ள சிக்மா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி கையால் வெளியிடப்பட்டது. சிக்மா குழுவினர் சமீபத்தில் அந்த மாஸ்டர் திரைப்பட இயக்குனரைச் சந்தித்து, அவரிடம் படத்தின் டிரெய்லரைக் காண்பித்தனர். ராஜமௌலி, அறிமுக எழுத்தாளர்-இயக்குனர் ஜேசன் சஞ்சயின் திரைப்பட உருவாக்கத்தை, குறிப்பாக அதன் காட்சிப் படைப்பையும், கொள்ளை நாடகம், ஜென் Z தலைமுறை அதிரடி மற்றும் உணர்ச்சிகளை அவர் கலந்த விதத்தையும் பாராட்டினார்.
ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாராட்டிய ராஜ மௌலி, “இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு கிடைத்த முதல் எண்ணம் என்னவென்றால், இது ஒரு ஜாலியான அனுபவம் என்பதே. இதில் ஏராளமான பொழுதுபோக்கு, நிறைய சாகசங்கள் மற்றும் ஜென்ஸி தலைமுறைக்கான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. 'சிக்மா' படம் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தவறவிடாதீர்கள். இதில் பல குறிப்பிடத்தக்க நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த ஜாலியான சாகசத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் அனைவரும் சிறப்பான பணியைச் செய்துள்ளனர்” என்று ராஜமவுலி பேசியுள்ளார்.