அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில், நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் குடும்ப திரைப்படமாக வெளிவந்த இப்படத்தை, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாக ஆரம்பிக்கும் திரைப்படம், ஹியூமராகவும், எமோசனாகவும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக வலம்வருகிறது. அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடப்பாண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக வலம்வரும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை, தமிழ்சினிமாவின் பெரும் நடிகர்கள் பாராட்டிய நிலையில், பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் பாராட்டி பேசியுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். அதேபோல படத்தை பார்த்த நடிகர் ரஜினி மனம் விட்டு பாராட்டியதாக சசிகுமார் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படத்திற்கு மற்றொமொரு பெரிய பாராட்டாக இயக்குநர் ராஜமௌலி பாராட்டி பேசியுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஜமௌலி, “ஒரு அற்புதமான திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். மனதைத் தொடும் விதமாகவும், குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிறம்பிய படமாகவும் இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் சிறந்த எழுத்து மூலம், சிறந்த இயக்கத்தையும் கொடுத்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி. படத்தை தவறவிடாதீர்கள்..” என்று பதிவிட்டுள்ளார்.