கேஜிஎஃப், சலார் போன்ற பிளாக்பஸ்டர் பான் இந்தியா திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், தன்னுடைய படங்களில் சலார் 2 படத்தை கதை சிறந்ததாக இருக்கும் என்றும், ரசிகர்களின் கற்பனையை சேலஞ்ச் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறிய நடிகர் பிரபாஸ், அந்த திரைப்படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் போன்ற மூன்று தோல்வி படங்களை கொடுத்தார். அவ்வளவுதான் பிரபாஸுக்கு இதற்குபிறகு வீழ்ச்சி தான், அவரால் பான் இந்தியா திரைப்படங்களை இதற்குமேல் கொடுக்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இத்தகைய சூழலில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இணைந்த பிரபாஸ் ”சலார்” என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து மீண்டும் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார். இந்தப் படத்தில் பிரபாஸுடன், பிருத்விராஜ் சுகுமாரன் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். உடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ரவி பஸ்ரூர் இசையில் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான சலார் படம் ரூ.700 கோடிவரை வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
சலார் முதல் பாகம் இயக்கத்தில் தனக்கு முழு திருப்தியில்லை என்று கூறியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் சலார் படத்தை சரியாக எடுக்காமல் போய்விட்டேனோ என்ற ஆதங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சலார் திரைப்படத்தின் ஓராண்டு நிறைவை அடுத்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பிரசாந்த் நீல், “சலார் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக இருந்தாலும் அது எனக்கு ஏமாற்றத்தை தான் அளித்தது. அந்தப் படத்தில் நிறைய கடின உழைப்பு இருந்ததால், இன்னும் அதிகமான வரவேற்பை அப்படம் பெற்றிருக்க வேண்டும். அந்தவிதத்தில் சலார் முதல் பாகத்தை இயக்கியதில் நான் முழுமையான சந்தோஷத்தை அடையவில்லை. கே.ஜி.எஃப் 2 கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தை சரியாக எடுக்காமல் விட்டுவிட்டேனோ என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
இதனால் சலார் 2 படத்தை எனது சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளேன். இதை நான் பேச்சுக்காகவோ குருட்டு நம்பிக்கையிலோ சொல்லவில்லை, இதுவரை நான் எழுதிய கதைகளை விட சலார் 2 எனது சிறந்த படைப்பாக இருக்கும். நான் கற்பனை செய்வதை விடவும், ரசிகர்கள் கற்பனை செய்வதை விடவும் படத்தை பெரிதாக உருவாக்கப் நினைக்கிறேன். இது சந்தேகத்திற்கு இடமின்றி எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.
இப்படம் வெற்றிபெற்றதால் மட்டும் நான் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைக்கவில்லை, வரதாவும் தேவாவும் எப்படி நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறுகிறார்கள் என்ற குறிப்பிட்ட கதைநகர்வை சுவாரசியமாக எடுக்க வேண்டும் என்ற ஆவலே இப்படத்தை சிறப்பாக கொடுக்கவேண்டும் என்ற மையத்திற்கு என்னை தள்ளியுள்ளது” என்று கூறியுள்ளார்.