நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் இரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியது.
சில தினங்களுக்கு முன்பு கூட போலீஸ் உடையில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘தர்பார்’ குறித்து அப்டேட் வெளியிட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் 6 மணிக்கு வெளியான தகவலில் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அதன்பின்னர் 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் கூறினார்.
அதன்படி, ‘தர்பார்’ படத்தின் இரண்டு புகைப்படங்கள் மற்றும் டைட்டில் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தில் ரஜினி காவல்துறை உடையில் ஜர்க்கின் அணிந்துள்ளார். கையில் ஒரு கட்டை வைத்துள்ளார். அதிலிருந்தே அது அக்ஷன் காட்சி என்பது தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில் காவல்துறை அலுவலகத்தின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்கிறார். அது ஒரு காதல் சீன் அல்லது பாடலாக இருக்கலாம். அத்துடன் டைட்டில் கார்டில் பின்புறத்தில் கறுப்பு நிறமும், அதற்குள் சிவப்பு நிறமும், ‘தர்பார்’ என்பது வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. இந்த இரண்டு படங்களை வைத்து ரசிகர்கள் தயாரிக்க போகும் சிறந்த டிசைன் போஸ்டர் ஒன்றை தேர்வு செய்து படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று முருகதாஸ் உறுதியளித்துள்ளார்.