அஜித் குமார் - மகிழ் திருமேனி web
சினிமா

“பண்டிகை நாள்-ல படம் வரலனா என்ன? நம்ம படம் வர்ற நாள் பண்டிகையா மாறும்”- அஜித் சொன்னதை பகிர்ந்த மகிழ்

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிப்போன போது அஜித் சொன்ன வார்த்தைகளை பகிர்ந்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

Rishan Vengai

நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

மீகாமன், தடையறத்தாக்க, தடம் போன்ற க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் மகிழ்திருமேனி பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

அதன்படி வெளியான விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரண்டு மடங்காகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீயாக பேக்ரவுண்ட் இசையில் அனிருத் மிரட்டியிருக்கும் சூழலில், வெளியான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல்களும் டிரெண்டிங்கில் சம்பவம் செய்துவருகின்றன.

அஜித் - த்ரிஷா

இந்நிலையில் படமானது வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

நம்ம படம் வர்ற நாள் தான் பண்டிகை..

விடாமுயற்சி படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பல நேர்காணல்களில் பங்கேற்று படம் குறித்தும் அஜித் குறித்தும் பேசிவருகிறார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதிலிருந்து தள்ளிப்போனபோது அஜித் சொன்ன வார்த்தைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதுகுறித்து பேசியிருக்கும் அவர், “பொங்கலுக்கு படம் வெளியாகப் போவதில்லை என்பது தெரிந்தவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அப்போது அருகிலிருந்த அஜித் சார், ‘மகிழ் வருத்தப்படாதீர்கள். பண்டிகை தினத்தில் நம்முடைய படம் வெளியாகவில்லை என்றால் என்ன? நம்ம படம் வெளியாகும் நாள் பண்டிகை நாளாக மாறும்’ என்று சொன்னார்” என மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல ரேஸுக்கு செல்வதற்குள் இரண்டு படங்களையும் முடிக்க வேண்டும் என்று அஜித் கூறிய விசயத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், “கார் ரேஸில் பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ‘ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால்தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் இரண்டு படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன். ரேஸிற்கு செல்லும்போது நான் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டும். அந்த தருணத்தில் எனக்கு 2 படம் இருக்கு, கமிட்மெண்ட் இருக்கு என நினைத்து 90% மட்டும் அழுத்தினால், நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பதுபோல ஆகிவிடும்’ எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இதை வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன்” என்று மகிழ் திருமேனி கூறியுள்ளார்.