திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வர்த்தக மையத்தில், கடந்த 10ஆம் தேதி முதல் பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த, புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், வாசிப்பின் அவசியம் குறித்தும், தனது திரைப்படங்கள் வழியே அவர் முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகப் பேசினார். இதுகுறித்துப் பார்க்கலாம்.
இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். வாசிப்பு என்பது வெறும் தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல, அது ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதற்கான (Self-realization) வழி. எனக்குள் இருந்த பயத்தைப் போக்கி, என் கதைகளை உலகிற்குச் சொல்லும் மொழியையும், துணிச்சலையும், ஆற்றலையும் தந்தது இந்தப் புத்தக வாசிப்புதான். வாசிப்பு என்பது இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமானது” எனத் தெரிவித்தார்.
அப்போது, ”நீங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றும் எண்ணம் உள்ளதா” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நான் ஒரு திரைப்பட இயக்குநர். கலைதான் என் தளம்.
அந்தத் தளத்தில் நின்றுகொண்டு நான் நம்பக்கூடிய சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகக் கடுமையாக இயங்குவேன். என் திரைப்படங்களே அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான்” எனத் தெரிவித்திருக்கிறார்.