சினிமா

விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...?

subramani

சினிமா என்பது காட்சி மொழி என்பதை உணரவே நமக்கு வெகுகாலம் தேவைப்பட்டிருக்கிறது., ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களின் திரை வடிவமாக மட்டுமே பல சினிமாக்கள் உருவாக்கப்பட்டது. அப்படியொரு நிலையில் சினிமாவின் முழு பலத்தை அதன் எல்லையற்ற சாத்தியங்களை உணர்ந்து காட்சி மொழியில் கதை சொன்னவர் மகேந்திரன். 1939’ல் இளையாங்குடி என்ற ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் அலெக்ஸாண்டர்.

எம்ஜிஆர் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த மகேந்திரன் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம், ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 20-க்கும் அதிகமான படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முதன் முதலில் இவர் இயக்குநராக அறிமுகமான படம் ’முள்ளும் மலரும்’. இந்தப் படம் தமிழ் சினிமாவின் போக்கை திசை மாற்றியது. அதுவரை இருந்த நாடகத்தனம் உடைத்து எறியப்பட்டு யதார்த்தம் நோக்கி பயணிக்கத் துவங்கியது தமிழ் சினிமா.

கை நிறைய அன்பை அள்ளி வெள்ளித் திரையில் பூசியவர் மகேந்திரன். அவரது படைப்புகள் எல்லாமே அன்பையும் மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் மையப்படுத்தி இருக்கும். ’முள்ளும் மலரும்’ ’உதிரிப்பூக்கள்’ ‘ஜானி’ ‘மெட்டி’ போன்ற திரைப்படங்கள் மூலம் வாழ்வின் மகிழ்ச்சி வெறுமை ஏக்கம் அன்பு இருப்பு இல்லாமை என அனைத்தையும் அதனதன் துல்லிய அலைவரிசையில் ஜனங்களுக்கு கடத்தியவர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி காந்தின் உடல் மொழியே மாறிப் போனது என்று சொல்லலாம். அந்த படத்தில் காளி கதா பாத்திரத்திற்கு மகேந்திரன் கற்றுக் கொடுத்த உடல் மொழி நீண்ட காலம் ரஜினியுடன் பயணித்தது.

‘உதிரிப்பூக்கள்’ இந்த திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றண்ணை என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது.  இந்த படத்தின் வசனத்தை மொத்தமாக நான்கு பக்க காதிதத்தில் எழுதி விடலாம். ஆனால் அந்த படம் பார்க்கும் அனைவர் மனதிலும் சுமக்க முடியாத ஏதோ ஒன்றை சுமத்திவிடுகிறார் மகேந்திரன்.

மகேந்திரனைப் பற்றி பேசும் போது பாலுமகேந்திராவை எப்படி தவிர்க்க முடியும். முள்ளும் மலரும் திரைப்படத்தின் ஆன்மா மகேந்திரனுடையது என்றால் உடல் பாலுமகேந்திராவுடையது. அந்த அளவிற்கு இப்படத்திற்கு இன்னொரு இயக்குனராக பணியாற்றியவர் பாலுமகேந்திரா.

ஜானி திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும்  ரஜினிக்கும் இடையில் இருக்கும் காதல் அத்தனை அழகாக இருக்கும்., ஸ்ரீதேவியும் ரஜினியும் இணைந்து எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஜானி நிகழ்த்திய மாயம் என்பது வேறு தான். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தை, இயக்குநர் பாலசந்தர் கேள்விகள் கேட்டு பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். பலரும் நினைத்தது தன் குருநாதர் ‘பாலச்சந்தர்’ பெயரைத்தான் ரஜினி சொல்லப் போகிறார் என்று ஆனால், அன்று ரஜினி சொன்ன பெயர் ’மகேந்திரன்’.

துக்ளக்கில் பணி புரிந்த காலத்தையே தன் வாழ்வின் மிகச் சிறந்த காலம் என்பார் மகேந்திரன். அவரது எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35MM படச்சுருளில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!.

நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்!

ஒருமுறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்படப் பயிற்சி அளித்தார் மகேந்திரன். விடைபெருகையில் பிரபாகரன், மகேந்திரனின் கைகளைப் பிடித்து ‘முள்ளும் மலரும்’ க்ளைமேக்ஸ் காட்சி என்னை ரொம்பவே பாதித்தது என்று சொல்லி இருக்கிறார். அதை 'சில்லிடும் தருணம்’எனக் குறிப்பிடுவார் மகேந்திரன்.!

அன்பைத் தவிர என்னிடம் சொல்ல வேறு எந்த செய்தியும் இல்லை என்று சொன்னவர் மகேந்திரன். கைநிறைய அன்பை அள்ளி வெள்ளித் திரையில் பூசியவர் அல்லவா அவர்.


வீடியோ :