சினிமா

’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்

webteam

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இலங்கைத் தமிழில் பேசி கமல்ஹாசன் நடித்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த படம் தெனாலி. அந்தப் படம் வெளியான ஆண்டு 2000, அக்டோபர் 26. இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. எலி கண்டால் பயம்... என்று கமல் பேசும் இலங்கைத் தமிழ்ப் பேச்சு சிரிப்பு சரவெடியாக இருக்கும். ஜெயராம், ஜோதிகா, தேவயானி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா மற்றும் மதன் பாப் என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருந்தார்கள்.

தெனாலி படம் உருவான அனுபங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்...

"மருதநாயகம் படம் தள்ளிவைக்கப்பட்டதும் என்னை அழைத்துப் பேசினார் கமல் சார். தன் கையில் ஓர் ஆண்டு இருப்பதாகவும், இரு படங்களில் நடிக்கலாம் என்றும் சொன்னார். ஒரு படத்தை அவர் இயக்குவதாகக் கூறினார். அடுத்த படத்தை நான் இயக்க ஒப்புக்கொண்டேன். நீங்கள் அந்தப் படத்தைத் தயாரிக்கலாமே என்றும் கேட்டார். நான் தயாரிப்பாளராக ஆவது பற்றி யோசிக்கவேயில்லை. தைரியமாக பண்ணுங்க சார் என்றார்.

உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். உங்க ஆபீஸ்ல வந்து படுத்துடுறேன். எப்ப வேணுமோ கூப்பிடுங்க என்று கமல் உற்சாகம் கொடுத்தார். ஆனால் நான் தயாராகவில்லை. அப்பதான் படையப்பா வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு விவாதத்திற்ககாக ரஜினி சார் வந்திருந்தார். அவரிடம் கமல் அழைப்பைப் பற்றிச் சொன்னேன். நல்ல விஷயமாச்சே, போய் எவ்வளவுன்னு கேளுங்க, கேட்டுட்டு அட்வான்ஸ் கொடுங்க என்றார். உடனே பணத்திற்கு ஏற்பாடு செய்து கமல் சாரை ஒப்பந்தம் செய்தேன்.

ரஜினி சார்தான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார். அமெரிக்க ப்ளாக் காமெடி படமான வாட் எபெளவுட் பாப்? என்ற படத்தின் பாதிப்பில் தெனாலியை உருவாக்கினேன். ஆனால் ஒரு காட்சியைக்கூட நான் காப்பி செய்யவில்லை. ஒரு வரிக் கதைக்கு 10 திரைக்கதைகளை உருவாக்கினோம். அந்த ஆங்கிலப் படம் ஹிட்டாகவில்லை. ஆனால் தெனாலி படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வெற்றிபெற்றது.

திரைக்கதையை எழுதி முடித்ததும் ஏதோ திருப்தி இல்லாமல் இருந்தது. அவ்வை சண்முகி படத்திற்கு மாமி கெட்டப் கூடுதல் சிறப்பை சேர்த்ததுபோல தெனாலி படத்திற்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்காக எந்த கெட்டப் மாற்றமும் செய்யவேண்டாம் என்று கமல் சொல்லிவிட்டார். அப்போதுதான் அவர் என்னிடம் விவரித்திருந்த இன்னொரு கதை நினைவுக்கு வந்தது.

இந்தக் கதை பிறகு அன்பே சிவம் படமாக வெளிவந்தது. ஒரிஜினல் கதைப்படி, அவருடைய கதாபாத்திரம் இலங்கைத் தமிழ் பேசுவதாக இருக்கும். அதை அப்படியே தெனாலியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் கமல். இலங்கைத் தமிழ் பற்றிய ஆலோசனைக்கு படப்பிடிப்புத் தளத்தில் அப்துல் ஹமீதை துணைக்கு வைத்துக்கொண்டோம். டப்பிங் வரை அவர் உதவியாக இருந்தார். தெனாலி படம் உருவாக கமல் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். உலக நாயகன் என்ற பட்டத்தை வழங்கினேன்.

டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு தெனாலியில் அற்புதமான காட்சிகள் இருக்கும். நாங்கள் ஊட்டி, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். கடுங்குளிரான பருவநிலையில் அவர்கள் ஏரியில் குதிக்கவேண்டும். அவர்களுக்கு மிளகு சீரகத்தைக் கொண்டு கஷாயம் போட்டுக்கொடுத்தார் கமல். அதைச் சாப்பிட்டால், மீண்டும்கூட ஏரியில் குதிக்கும் அளவுக்கு இருந்தது. படத்தில் கமல்சார் மட்டும்தான் கோட் போட்டிருந்தார். ஜோதிகா, தேவயானி உள்பட பலரும் அணிந்திருக்கமாட்டார்கள். எல்லோருமே படத்திற்கான ஆர்வத்துடன் உழைத்தார்கள்" என்று நெகிழ்ந்து பேசுகிறார் கே. எஸ். ரவிக்குமார்.