ஜித்து மாதவன் x page
சினிமா

‘ஆவேசம்’ மற்றும் ‘சீன்’ இரண்டாம் பாகம்.. பரவிய வதந்தி.. இயக்குநர் விளக்கம்!

‘ஆவேசம்’ மற்றும் ‘சீன்’ இரண்டாம் பாகம் பற்றி பரவிய வதந்திகளுக்கு அப்படங்களின் இயக்குநர் ஜித்து மாதவன் விளக்கமளித்துள்ளார்.

PT WEB

தீபாவளி நாளில் வெளியான 'சீன்' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், தனது திரைப்படங்களான 'சீன்' மற்றும் 'ஆவேசம்' ஆகியவற்றின் இரண்டாம் பாகங்கள் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதுவரை தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஒரே இரண்டாம் பாகத் திரைப்படம் 'ரோமாஞ்சம் 2' மட்டுமே என்று உறுதிப்படுத்தினார். 'ஆவேசம் 2' மற்றும் 'சீன் 2' குறித்த தகவல்கள் வெறும் யூகங்கள்தான் என்றும், அவற்றை, தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு வெளியான மலையாள ஆக்‌ஷன் காமெடி திரைப்படமான 'ஆவேசம்' படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இதில் ஃபஹத் ஃபாசில், ரங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

2026ஆம் ஆண்டு வெளியான தமிழ் கிரைம் காமெடி திரில்லர் திரைப்படமான 'சீன்' படத்தையும் ஜித்து மாதவனே இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களின் கதைகளும் திறந்த முடிவுடன் (Open Ending) அமைக்கப்பட்டிருந்தாலும், அவை இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் அல்ல என்று அவர் விளக்கியுள்ளார். பார்வையாளர்களின் கற்பனையில் அந்தக் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவே அத்தகைய முடிவுகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஆவேசம் 2' குறித்து ஒருகட்டத்தில் பேசப்பட்டிருந்தாலும், அதில் இதுவரை எந்தவொரு உறுதியான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூறியுள்ளார்.