சினிமா

அஜித்தால் தாமதமாகிறதா வலிமை படப்பிடிப்பு? - வருத்தத்தில் இயக்குநர்?

webteam

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பின் நடிகர் அஜித், மீண்டும் இயக்குநர் ஹெச். வினோத் எடுத்து வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியின் ‘பிங்க்’ படத்தைத் தழுவி ‘நேர்கொண்ட பார்வை’யை எடுத்திருந்த இயக்குநர் வினோத், இப்போது தனது சொந்த பாணியிலான புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதனை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், கடந்த டிசம்பரில் வேகமாக ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பில் இடையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, படத்தின் இயக்குநர் வருத்தத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ளது.

‘வலிமை’ முதற்கட்ட படப்படிப்புக்கு இடையே அஜித், காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் சிலருக்கு குட்டி ஹெலிக்காப்டர் தயாரிப்பது பற்றி கற்றுத் தருவதற்காகச் சென்றார். அது சம்பந்தமான புகைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வைரலாகின. மேலும், அஜித் ஐஐடி மாணவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்காக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு இவர் தலைமையில் பயிற்சி பெற்ற தக்‌ஷா அணியினர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

இந்நிலையில், அஜித் யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுடன் இணைந்து தற்போது ஒரு புதிய திட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவர் ‘வலிமை’ படப்பிடிப்பில் பங்கேற்பதில் சில தாமதங்கள் நிலவுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பு தள்ளிப்போவதால், இயக்குநர் ஹெச். வினோத் மன வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் தனக்கான பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு வேறு காட்சிகளைப் படமாக்க வேண்டும் என்றும் அஜித் இயக்குநரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்கள் சார்ந்து படக்குழு இதுவரை எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.