சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த கெளதம் மேனன்!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த கெளதம் மேனன்!

sharpana

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் ’விடுதலை’ படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இணைந்திருக்கிறார்.

’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு.

போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கெளதம் மேனன் இணைந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, கெளதம் மேனன் கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.