தன்னுடைய இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகையும், தமிழ் ரசிகர்கள் நெஞ்சத்தையும் ஆண்டுவரும் இளையராஜா, அவரைச் சுற்றி சில சர்ச்சைகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்.
அதற்கு முக்கியக் காரணம் தன்னுடைய பாடல்களின் ராயல்டி சம்மந்தமாக அவர் எடுத்துள்ள நிலைப்பாடுதான். தன்னுடைய பாடல்களின் முழு காப்புரிமையும் தன்னிடம்தான் உள்ளது என அவர் சொல்ல ஆனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் காப்புரிமை தங்களிடம் இருப்பதாக சொல்கின்றன. இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த சூழலில் சமீபத்தில் வெளியான அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் இளையராஜா, அதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளா.
இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இவ்விவகாரம் குறித்து இளையராஜாவுக்கு ஆதரவாக ஆதங்கமான பதிவை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சிஎஸ் அமுதன்.
இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்த நிலையில், இயக்குநர் சி.எஸ்.அமுதன் இது தொடர்பாக முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2022-ல் ரத்தம் படத்துக்கான ப்ரோமோ ஒன்றில் ’படிக்காதவன்’ திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்த ‘ஒரு கூட்டுக் கிளியாக’ பாடலின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் பாடலைப் ப்ரோமோவில் பயன்படுத்த ‘ரத்தம்’ படத் தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாகவும், ஆனால் இளையராஜா தரப்பினர் பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு பாடலை பயன்படுத்த அனுமதி அளித்ததாகவும் அமுதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ஒரு கூட்டுக் கிளியாக பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இளையராஜாவின் குழுவைத் தொடர்பு கொண்டோம்.
எங்கள் தயாரிப்பாளர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள பணம் கொடுப்பதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால், பணம் எதுவும் தேவையில்லை எனவும், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அவர்கள் அனுமதி தெரிவித்தார்கள். இளையராஜா தன்னிடம் அனுமதியை மட்டுமே எதிர்பார்க்கிறார். அது நாம் செய்யக்கூடியது தான். ஒரு துறையாக நாம் அவருடன் நிற்கவில்லை என்றால், வேறு யார் தான் அதற்கு தகுதியானவர்?” என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்.