சினிமா

``நான் தவறு செய்துவிட்டேன்”- `லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் ட்வீட்!

நிவேதா ஜெகராஜா

தமிழ் சினிமாவில் வசூல் ரீதியிலான லேட்டஸ்ட் ஹிட், இயக்குநர் மற்றும் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம். படம் வெளியானதிலிருந்தே, பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், தற்போதுவரை `டாக் ஆஃப் தி டௌன்’னாக இருக்கிறார் பிரதீப். அதிலும் நேற்று, இணையத்தில் பிரதீப்தான் ட்ரெண்டிங்!

ஆனால் இதில் நேற்றைய தினம் அவர் ட்ரெண்டாக காரணம், லவ் டுடே மட்டுமல்ல; பிரதீப்பின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளும்தான்! அது வைரலான நிலையில் தற்போது அதற்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் பிரதீப். அப்படியென்ன போஸ்ட் அது? 

கடந்த வருடங்களில், பிரதீப் சில சினிமாக்கள் மீதும், அதில் பணியாற்றியிருந்தவர்கள் மீதும் கடும் விமர்சனம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பழைய பதிவுகளை எடுத்து, தற்போது அவரை கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அந்தவகையில் முதலில் சிக்கியது, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மீதான பதிவு. அதைத்தொடர்ந்து சச்சின் குறித்த பதிவு, நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் நடிப்பு குறித்த பதிவு, சுறா படம் குறித்த விமர்சனம், நேஹ்ரா - தோனியின் கிரிக்கெட் தொடர்பான விமர்சனம் என பல வலம் வந்தன.

அனைத்துமே ஸ்க்ரீன்ஷாட்களாக வலம் வந்தன. சிலர் அந்த ஸ்க்ரீன்ஷாட்களை ஷேர் செய்து, `என்ன இவ்ளோ மோசமா திரைப்பிரபலங்களை தாக்கியிருக்கீங்க’ என கேட்க, பலரும் `அது அவர் தன்னோட 17 – 18 வயசுல போட்ட ஏதோவொரு போஸ்ட். அந்த வயசுல நாமும் அப்படித்தானே இருந்திருப்போம். முதிர்ச்சியின்மையால அவர் போட்டிருப்பார். அதைப்போய் இப்போ தேடிக்கண்டுபிடித்து ஏன் அவரை கலாய்க்கணும்? நாமளும் அந்த வயசுல அப்படித்தானே இருந்திருப்போம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் ஒருசிலர், `நிஜமாவே இன்னைக்கான பாடம், இன்று முதல் ஒவ்வொரு நாளின் FB Twitter Insta memories எல்லாம் பாத்து only me அல்லது delete செய்ய வேண்டுமென்பது. Thank you Pradeep' என்று தெரிவித்து வருகின்றனர். 

உண்மையிலேயே பிரதீப் ரங்கநாதன் பக்கத்தில் அந்த போஸ்ட்கள் உள்ளதா என்பதை அறிய அவரது ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். ஆனால் அந்த ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அந்த முடக்கம், பிரதீப் ரங்கநாதன் தரப்பிலிருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதுபற்றி ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

அவர் கொடுத்துள்ள விளக்கம் இதுதான்:

“என் பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால், என் முகநூல் கணக்கை நீக்கிவிட்டேன். என் தரப்பு விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.

அதேநேரம் சில பதிவுகள் உண்மையானவைதான். ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நானும் தவறு செய்துவிட்டேன்தான். வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து வளர்ந்துதான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறோம். அதன்படி நானும் என் தவறுகளை, சரிசெய்ய முயற்சித்தேன். இன்னும்கூட ஒவ்வொரு நாளும் நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் :)”

இதுவொருபுறமிருக்க, "சார், தயவுசெஞ்சு உங்க அடுத்த படத்துல எனக்கொரு வாய்ப்பு கொடுங்க சார்” என பிரதீப் ரங்கநாதனிடம் வாய்ப்புகேட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.

2014-ல் பிரதீப் ரங்கநாதன் தனது  'வாட்ஸ்அப் காதல்' குறும்படத்தின் லிங்க்-ஐ பிரேம்ஜியிடம் 'பிடிச்சிருந்தா ஷேர் செய்ங்க சார்' என கேட்டிருந்தார். 8 வருடங்கள் கழித்து அந்த ட்வீட்டுக்கு பிரேம்ஜி இப்போது பதிலளித்திருந்தார்.

இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து, பிரதீப்பின் வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர். இது இரண்டுமே இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேரத்தில் தனது குறும்படத்தை ப்ரொமோட் செய்ய சொல்லி, பிரேம்ஜி மட்டுமன்றி நடிகர் விஜய் வசந்த், நடிகர் சித்தார்த், இயக்குநர்  வெங்கட்பிரபு என பலரிடமும் கேட்டுள்ளார் பிரதீப். அதை பகிர்ந்து பலரும், `இதுதான் வளர்ச்சி’ என அவரை பாராட்டி வருகின்றனர்! 

எப்படியிருந்தாலும், படம் வந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் டாக் ஆஃப் தி டௌனாகவே இருந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்!