சினிமா

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்: சேரன் ஆவேசம்

webteam

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

இன்று தயாரிப்பாளர்களின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சேரன், கூட்டாக ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர், “ஆன்லைன் பைரசி, கேபிள் டிவி திருட்டு போன்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தையே நாம் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவ்வப்போது அரசியல்வாதிகளை, அமைச்சர்களை மிரட்டும் தொனியில் ஊடகங்களில் விஷால் பேசுவதும், அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்புகளை வெளியிடுவதும், இப்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதும் என தொடரும் அவரது பல நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகும். இது எதிர்காலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கும். இதனால் தயாரிப்பாளர்களின் நிலை மட்டுமல்லாமல்; நமது திரை உலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும். அழியும் நிலைக்கு தள்ளப்படும்” என்றார்.

மேலும், “தமிழ் திரை உலகம் என்பது வெறும் 1230 தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டதல்ல. அந்தத் தயாரிப்பாளர்களை நம்பி இருக்கும் 24 சங்கங்களின் தொழிலளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை சுமார் 10 லட்சம் பேரின் வாழ்க்கை இதற்குள் அடங்கி உள்ளது என்பது உண்மை. இதை உங்கள் கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்று தெரியவில்லை. மேலும் தயாரிப்பாளரான இந்த எட்டு மாதத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்து முடிக்கவில்லை. இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருக்கிறீர்கள். இதனால் சங்கத்தின் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. எனவே தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என அனைத்து தயாரிப்பாளர் சார்ப்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் சேரன் கூறினார்.