தமிழ் சினிமா மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் பாரதிராஜா. 'இயக்குநர் இமயம்' எனப் பெயரெடுத்த அவர், தன்னுடைய படங்களில் அழுக்காடை கதாபாத்திரங்களையும், கிராமத்து வாசனையையும் அழகியலாய்ப் பேசவைத்தவர். ஆனால், அவர் இன்று நம்மோடு இல்லை. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர். அதேநேரத்தில், அவருடைய நினைவலைகள் பற்றி பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாரதிராஜா இயக்குநராக ஆவதற்கு முன்பு, அவர் ஒரு நடிகராக விரும்பினார். அது அப்போது கைகூடாதது குறித்து அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து அவர், "நான் ஒரு நடிகராவதற்காகவே இந்தத் துறைக்கு வந்தேன். ஆனால் அந்தக் காலத்தில், ஒரு கதாநாயகனாக பொம்மை போன்ற முகம் தேவைப்பட்டது. ஜெமினி கணேசன் மற்றும் ஏ.வி.எம். ராஜன் போன்ற அழகான ஆண்கள்தான் அப்போது கதாநாயகர்களாக இருந்தனர். எனது கரடுமுரடான முகத்தோற்றத்துடன், எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை" என்று சொன்னவர், அடுத்த நொடியோ, ”நான் தோற்றுவிட்டதால், கடும் கோபத்தில் கொதித்து, அனைவரையும் நட்சத்திரங்களாக மாற்றுவேன் என்று முடிவு செய்தேன். ஒரு கதாபாத்திரம் அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார். ஆம், அந்த நிராகரிப்புதான் அவரை ஒரு தலைசிறந்த இயக்குநராக மாற்றியது. தவிர, அவரது இயக்கத்தில் ராதா, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா எனப் பல நட்சத்திரங்கள் தமிழ்த் திரைவானில் மின்ன ஆரம்பித்தன. நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பல இயக்குநர்களும் உதயமாகினர். ஆரம்பத்தில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும் பின்னாட்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மக்களின் மனங்களிலும் இடம்பிடித்தார்.