பாரதிராஜா
பாரதிராஜா pt web
சினிமா

“எக்காள பேச்சு; வன்மமான சிரிப்பு”.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

Angeshwar G

பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அமீர், நடிகர் சசிகுமார் போன்றோர் கண்டனங்களை தெரிவித்திருந்தார். தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனியும் தனது கண்டங்களைக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

Director amir

இதேசமயத்தில் பருத்திவீரன் திரைப்படத்தின் பிரச்சனையை சாராது, தயாரிப்பாளர் ஞானவேல் பொதுவெளியில் அமீர் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இயக்குநர் கரு பழனியப்பன், “இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல. ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.! பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே, நான் சொல்லுகிறேன்.

ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி” என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் அதே பாணியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பருத்திவீரன் படம் குறித்து பேசாது ஞானவேல் ராஜாவின் கருத்துகளைப் பற்றி பேசியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு.அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம்.

பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.