அட்லீ - விஜய் சேதுபதி பத்தா பட விழா
சினிமா

"இவரு அவர சொல்றாரு.." அட்லீ பேச பேச முகம்மாறிய விஜய் சேதுபதி!

“விஜய் அடுத்த தலைமுறைக்கான அரசியலை ” என இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

PT WEB

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ விழாவில் அட்லி பேசிய உரை வைரலாகிறது. விஜயின் அரசியல் வருகை குறித்து அட்லீ பேசியிருப்பது, லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசியதுடன் ஒப்பிடப்பட்டு பேசப்படுகிறது.

செய்தியாளர் - M. மீரா

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தனது திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லி. நடிகர் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அட்லீ, நடிகர் விஜய் உடன் தனது பயணம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். தனது உடை, கடிகாரம் உள்ளிட்டவற்றை தனது உழைப்பால் சம்பாதித்ததாக கூறிய அட்லீ, அதே நேரத்தில் தனது வாழ்க்கையில் விஜய்க்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக தெரிவித்தார். என் அண்ணன் தளபதி விஜய் இல்லையென்றால் எனக்கு இந்த வாய்ப்புகளே கிடைத்திருக்காது என்று அவர் கூறினார்.

Atlee & Vijay

அட்லி இயக்கிய திரைப்படமான ’ராஜா ராணி’ அவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு விஜய் நடித்த தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இந்தப் படங்கள் தனது திரைப்பயணத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாக அட்லி குறிப்பிட்டார்.

ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தனது அலுவலகத்திற்கு ஷாருக்கான் வந்ததாகவும், இருவரும் சந்தித்துப் பேசியதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். அப்போது அந்தப் படத்தை இயக்குவது தனது திரைப்பயணத்தையே மாற்றக்கூடும் என்றும், எனவே தயக்கமின்றி படத்தை செய்யுமாறும் விஜய் கூறியதாக அட்லீ நினைவுகூர்ந்தார். அந்த வாய்ப்பு தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், அதற்காக விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Vijay, Atlee & Shah Rukh Khan

விஜயைப் பற்றி தொடர்ந்து பேசுவதால், அவருடன் மீண்டும் படம் இயக்குவதற்காக அட்லீ முயற்சி செய்கிறார் என சிலர் நினைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், அவர் முதலமைச்சராகிவிட்டதால் இனி அவருடன் படம் எடுக்க முடியாது; ஆனால், அவர் இன்னும் என் சகோதரர்தான் என்று அட்லி கூறினார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்திருப்பது அடுத்த தலைமுறையினரிடையே அரசியல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளதாகவும் அட்லீ கருத்து தெரிவித்தார். ஐந்து வயது குழந்தைகள்கூட சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கும் அளவுக்கு அரசியல் குறித்து ஆர்வம் உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

விஜய் சேதுபதியை வைத்துக்கொண்டே அட்லீ இப்படி பேசியது சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. சமீபத்தில் லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசியது முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்ததாக சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.