மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், ஜூன் 5-ம் தேதியான இன்று உலகம் முழுதும் வெளியாகியது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடகாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல், சிவராஜ் குடும்பத்திற்கும் அவருக்கும் உண்டான உறவுகுறித்து மேன்மையாக பேசினார்.
ஆனால் அதேநேரத்தில் 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்று கமல் பேசியது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது. இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் படம் கர்நாடகாவில் வெளியானால் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என கன்னட அமைப்புகள் எச்சரித்தனர்.
இந்த சூழலில் கமல் தரப்பில் தன்னுடைய தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் கமல்பேசியது சர்ச்சைக்குரிய வகையில் மாறிய நிலையில், இன்று தக் லைஃப் திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது.
கமல்-மணிரத்னத்தின் ரசிகராக திரைப்படத்தை பார்க்கவந்த இயக்குநர் அமீர், ”என்னுடைய முதல் திரைப்படமான மௌனம் பேசியதே இசை வெளியீட்டு விழாவின் போது கமல்-மணிரத்னம் இருவரும் பங்கேற்றார்கள். அது நடந்து கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகிவிட்டது, அப்போதே நான் அவர்களிடம் உங்கள் இருவரின் கூட்டணியில் மீண்டும் திரைப்படம் எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். அதற்கு மணி சாரிடம் கேளுங்கள் என்று கமல் சார் சொன்னார். கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து அவர்கள் கூட்டணியில் ஒரு படம் வெளியாகியுள்ளது. நான் எப்படி நாயகனை ஒரு ரசிகனாக திரையரங்கில் சென்று பார்த்தனோ, அதேபோல ஒரு ரசிகனாக தான் இந்த திரைப்படத்தையும் பார்க்க வந்துள்ளேன்” என்று பேசினார்.
பின்னர் கமல் விவகாரம் குறித்து கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், “கமல் எந்த மொழியையும் குறைத்தும் பேசவில்லை, தவறாகவும் பேசவில்லை. திராவிட குடும்பத்தில் உள்ள மொழி என்று தான் கமல் பேசினார். அது கர்நாடக மக்கள், சிவராஜ் குடும்பத்தினர் என அனைவராலும் சரியான அர்த்தத்துடன் தான் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் அதை அரசியல் செய்யணும்னு நினைக்குற சில கர்நாடக அமைப்புகள் பெரிதாக மாற்றிவிட்டார்கள்” என்று கூறினார்.