lal salaam trailer
lal salaam trailer PT
சினிமா

‘யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமிதான்’-கெத்தாக ரஜினி; மாஸ் காட்டும் லால் சலாம் ட்ரெய்லர்!

Prakash J

நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”விளையாட்டு வினையாக முடிந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் சாராம்சம். ‘லால் சலாம்’ திரைப்படத்தின் இன்னொரு டைட்டில் ’திசையெட்டும் பரவட்டும்’ என்று வைத்திருந்தோம். ஒரு போட்டியில் பணம், பொருள், என்று வந்துவிட்டால் பிசினஸ் வந்துவிடுகிறது. இதில் அரசியல் நடந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை. ஒவ்வொரு இடத்திலும் அரசியல் உள்ளது.

இந்தப் படத்திலும் அரசியல் பேசப்படுகிறது. நான் இசை வெளியீட்டு விழாவில் பேசியதைச் சுட்டிக்காட்டி அப்பாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. நான் மேடையில் இதைத்தான் பேச உள்ளேன் என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஆனால் அதற்கும் அவர் பதிலளித்துவிட்டார். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் படம் ஓடுவதற்கு ’இது என்ன ஸ்டேட்டஜியா’ எனக் கேட்டதுபோல் இருந்தது. நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். படத்தில் அரசியல் பேசியோ அல்லது அவர் நம்பாததை நடிச்சோ படம் ஓடவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ’ஜெயிலர்’ படம் ஓர் உதாரணம். சொந்த கருத்தை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் மனுஷன் அவர்” எனப் பேசினார்.

நடிகை நிரோஷா பேசுகையில், ”ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. கமலஹாசனுடன் நடித்துள்ளேன். ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது தெலுங்கு படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பெண் இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளேன்” எனக் கூறி மகிழ்ந்தார்.

சிறிது நேர தாமதத்திற்கு பிறகு ட்ரெய்லர் வெளியாகியது. ட்ரெய்லரில் பல வசனங்கள் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. திருவிழாவை மையமாக வைத்தும், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கதை நகர்வது போல் உள்ளது. செந்தில் பேசும் வசனம் உருக்கமாக உள்ளது. ரஜினி மிகவும் மாஸ் ஆக உள்ளது. திருவிழா பாடல் வரிகளும் இசையும் நன்றாக உள்ளது.

லால் சலாம் வசனங்கள்:

  • ”கூட்டம் சேர்க்கரவங்கள விட யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவங்க ஆபத்தானவங்க.. ”

  • ”நான் கோர்ட்ட மதிக்கலனு யார் சொன்னா? உள்ள இருக்க சில ஆட்கள் மேல நம்பிக்கை இல்லைனு சொல்றேன்”.

  • ”திருவிழா அன்னிக்கு மட்டும் தான் என் பையன் பேரப்புள்ளிங்க எல்லாம் கூட இருப்பாங்க. நான்லா வருஷம் பூரா வாழ்றதே இந்த ரெண்டு நாளைக்கு தாண்டா”

  • ”எந்த ஊரு சாமியா இருந்தாலும் யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமி தான்”

  • ”ஊர்ல வெள்ள வேட்டி வெள்ள சட்டை கட்டிகிட்டு அல்லாஹூ அக்பர்னு 5 வேல நமாஸ் பண்ணிகிட்டு சாந்தி, சமாதானம்னு பேசிக்கிட்டு இருக்கிற ஆளுனு நெனச்சியா பம்பாய்ல பாய் ஆளே வேறடா”

  • ”மதத்தையும், நம்பிக்கையையும் மனசில வை, மனிதத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடி ஆழம்”.

’பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ வசனம் பாட்ஷா படத்தை நினைவூட்டும் வகையில் இருந்தது.

முன்னதாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ராந்த் பேசுகையில், “கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு படவாய்ப்பே கிடையாது. படம் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். அந்த சமயத்தில்தான் ஐஸ்வர்யா மேம் அழைத்து இந்த வாய்ப்பு கொடுத்தார். சிறு கதாபத்திரம் அல்லது வில்லன் பாத்திரமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அப்போதுதான் நான் நினைத்தேன், திரை உலகில் மீண்டும் கடவுள் தொடர வைக்கிறார் என்று. கடவுளுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் நன்றி. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் 35 நாட்கள் நடித்ததை மறக்கவே முடியாது. என்னைப் பல இடங்களில் குறிப்பிட்டு ரஜினி சார் பாராட்டினார்.

படப்பிடிப்புத் தளத்தில் ஒருமுறை ரஜினிகாந்த்திடம், ’எப்படி சார் எல்லாவற்றையும் ஒட்டிக்கொண்டே உள்ளீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ’ஒரு நிமிடத்தில் 10 நொடிகள்கூட வீண் செய்யக்கூடாது. ஒருமுறை பாலசந்தர் என்னிடம் இந்த கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் ரஜினிகாந்த் என்ன பண்ணினார் எனபதுதான் முக்கியம் என பாலசந்தர் என்னிடம் சொன்னார்’ என என்னிடம் கூறினார். ரஜினிகாந்த் தன்னை சூப்பர் ஸ்டாராக நினைக்கவில்லை இன்னும் பாலசந்தரின்மாணவராகவே உள்ளார்” என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசுகையில், "கிரிக்கெட்டைத் தவிர்த்துவிட்டு இன்றைக்கு இளைஞர்கள் கிடையாது. இந்தத் திரைப்படத்தில் குடும்பத்திற்கான எமோஷன் நிறைய உள்ளது. குழந்தைகளுடன் பார்க்கலாம். பிரச்னை ஏற்படுத்தும் வகையில் கன்டென்ட் இருக்கும் எனப் பலர் எண்ணுகிறார்கள். தேடிப் பார்த்தாலும் அப்படி ஒன்று படத்தில் கிடைக்காது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்துள்ளார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் படம் முழுக்க அவர் இருப்பார். செஞ்சியா திருவண்ணமலையா, புதுச்சேரியா எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும், ’அங்கு வருகிறேன்’ என உழைக்கிறார். இந்தப் படம் இல்லை என்றால் வாழ்க்கையே என்ற அளவில் நடிகர் ரஜினி நடித்தார். ரஜினிகாந்த்தின் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததை வைத்து, நாளையோ நாளை கழித்தோ ஓர் அசம்பாவிதம் நடக்கலாம் என ஒரு கருப்பு ஆடு வேலை செய்தாலும் அது நடக்கவே நடக்காது. அப்படி எண்ணுபவர்களின் எண்ணத்தை இந்த படத்தின் கருத்து முறியடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார்.