லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெருமளவில் வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம் திரைப்படம்.
படத்தின் மற்றொரு அம்சமாக இருக்கும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சிறப்பு தோற்றமாக சில நிமிடங்களே வந்தாலும் அவருக்கான காட்சிகள் அனைத்தும் கச்சிதமாக இருந்ததகாவும் ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், சில ஆண்டுகளுக்கு சினிமா நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் இயக்குநர் லிங்குசாமியிடம் நடிகர் சூர்யா பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அதில், கார்த்தியும், நீங்களும் எப்போது ஒன்றாக நடிக்க இருக்கிறீர்கள் என லிங்குசாமி கேட்க, அதற்கு சூர்யா, “நான் அமைதியான வில்லனாகவும், கார்த்தி பட்டையெல்லாம் போட்டுட்டு நல்ல பையனாகவும் இருக்கனும். அப்டி ஒரு படம் நடிச்சு பாக்கனும்னு தான் ஆசை” என கூறியிருந்தார்.
அந்த வீடியோவைத்தான் நெட்டிசன்கள் தற்போது விக்ரம் ரோலக்ஸ் vs கைதி தில்லி என பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருவதோடு, “உண்மையில் இது தற்செயலாகத்தான் நடக்கிறதா அல்லது லோகேஷ் கனகராஜ் அனைத்தும் உன்னிப்பாக கவனித்துதான் செயல்படுகிறாரா?” எனவும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கெனவே கைதி 2 படத்துக்கான ப்ரீ புரோடக்ஷன் வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது விக்ரம் 3க்கான lead இருப்பதால் அதில் கைதி தில்லியையும், ரோலக்ஸையும் நேருக்கு நேர் மோத விடும் வகையில் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறாரா என்ற தங்களது ஆவல் கலந்த சந்தேகங்களும் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.