பாலியல் வழக்கில் நிரபராதி என நிரூபிக்கும் வரை நடிகர் திலீப் திரைப்பட நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விலகியே இருப்பார் என்று சங்கத் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கேரள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் முடிவுக்கு இளம் நடிகர், நடிகைகள் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து கொச்சியில் பேசிய நடிகர் மோகன்லால், பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கமே தங்கள் சங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகக் கூறிய அவர், சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நடிகர் சங்கத்தில் இருந்து விலகியிருக்க திலீப் விரும்பியதாகவும், அதன்படி வழக்கில் நிரபராதி என அவர் நிரூபிக்கும் வரை விலகியே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகைகள் சிலர் சங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மோகன்லால் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.