சினிமா

‘நடிகர்களை தலைவன் என்று சொல்வது கஷ்டமாக இருக்கு; ரொம்ப ஓவரா போகுது’ - வெற்றிமாறன் பேச்சு

சங்கீதா

நடிகர்களை, தலைவன் என்று ரசிகர்கள் கூப்பிடுவது வருத்தமளிப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம், நடிகர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் அளவுக்கு எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என்று கூறுவார்கள். அவருக்கு முன்பு இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.

நாம் எல்லோரும் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளோம். இப்போதும் அப்படிதான் உள்ளோம். ஆனாலும் தற்போது அது அதிகமாகவேத் தெரிகிறது. சில சமயங்களில் அது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரொம்ப நாளாக இதுபற்றி எனக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அதை எங்க சொல்லலாம் என்று யோசித்து வந்தேன்.

அதை இப்போது சொல்கிறேன். நடிகர்களை, தலைவன் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை கொடுக்கும். நடிகர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பது ஓ.கே.தான். ஆனால் அவர்களை தலைவன் என்று சொல்வது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வாறு பண்ணாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். முன்னாடி இருந்த நடிகர்கள் அரசியலோடு தொடர்பில் இருந்தார்கள். அவர்களைத் தலைவர் என்று கூப்பிடுவது சரியாக இருந்தது. இன்றைக்கு இருக்கிற நடிகர்களை அப்படி கூப்பிடத் தேவையில்லை என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “சினிமாவில் உண்மை (Fact) என்பதே கிடையாது.  எல்லாமே பொய்களால் கட்டமைக்கப்பட்டவைதான் (Factual Error). சினிமா மூலம் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியாது. ஆனால், அந்த ஒரு விஷயத்தால் ஏற்படும் எமோஷனை கடத்த முடியும். ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாகப் படங்களை எடுக்கும்போது அது இயக்கமாக மாறுகிறது. 200 படங்கள் வரும் இடத்தில் 25 படங்கள் ஒரே மாதிரியான கருத்தை, சித்தாந்தத்தை கொண்டு வெளிவரும்போது அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தனிநபராக எதுவும் செய்ய முடியாது” என்றும் கூறினார்.

அத்துடன், ‘உங்களின் மாபெரும் தமிழ் கனவு என்ன?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சற்று யோசித்த இயக்குநர் வெற்றிமாறன், ‘தமிழ்நாடு’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லினார்.