சினிமா

அட்லி - ஷாருக்கானின் 'ஜவான்' - இத்தனை கோடிக்கு வாங்கியதா OTT நிறுவனம்?

JustinDurai

'ஜவான்' படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடித்து வருகின்றனர். முதன்முறையாக நயன்தாரா பாலிவுட் படத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே ஜவான் படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 'ஜீரோ' என்ற படம் வெளியானது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஷாருக்கான் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு ஷாருக்கானுக்கு 'பதான்', 'ஜவான்', டைட்டில் வைக்கப்படாத ஒரு படம் என தொடர்ச்சியாக 3 படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் 'ஜவான்' படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக வெளியான தகவல் குறித்துப் பேசிய திரைப்பட வர்த்தக ஆய்வாளர் அக்‌ஷயே ரதி, ''ஜவான் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமை என்ன விலைக்கு விற்கப்பட்டது என்பதைச் சொல்வது கடினம். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்டின் மற்ற எல்லாப் படங்களைப் போலவே ஜவான் படமும் நெட்ஃபிளிக்ஸுக்கு சென்றிருக்கும் என்று கருதுகிறேன். அட்லி, ஷாருக்கான் என மெகா கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் உண்மையாகவே 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: ’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ - கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!