Ranveer Singh Dhurandhar The Revenge
சினிமா

26 நாட்கள்தான்.. பாகுபலி, புஷ்பா சாதனை முறியடிப்பு.. இந்தியாவில் ’துரந்தர்’ படைத்த வரலாறு!

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

Prakash J

துரந்தர் படங்கள் 3,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இது பாகுபலி மற்றும் புஷ்பா ஆகிய இரண்டு பாகங்களின் மொத்த வசூலைவிட அதிகமாகும். இதற்கு முன்பு வேறு எந்த இந்தியத் திரைப்படங்களும் உலகளவில் 3,000 கோடி ரூபாயைக் கடந்ததில்லை.

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1,300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அது, நான்காவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 26 நாட்களுக்குப் பிறகு, இதன் வெளிநாட்டு வசூல் ரூ. 414.50 கோடியாகவும், இந்திய வசூல் சுமார் ரூ. 1,297.50 கோடியாகவும் உள்ளது. இந்த நிலையில், துரந்தர் இரு பாகங்கள் 3,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

ranveer singh

சாக்னில்க் என்ற வர்த்தக வலைத்தளத்தின்படி, துரந்தர் (2025) மற்றும் துரந்தர்: தி ரிவெஞ்ச் (2026) ஆகிய இரு படங்கள் உலகளவில் இணைந்து ரூ. 3,019.35 கோடி வசூலித்துள்ளன. இது பாகுபலி மற்றும் புஷ்பா ஆகிய இரண்டு பாகங்களின் மொத்த வசூலைவிட அதிகமாகும். துரந்தர் முதல் பாகம் ரூ 1,307.35 கோடி வசூலித்த நிலையில், துரந்தர் 2ஆம் பாகம் தற்போது வரை ரூ. 1,712 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக பாகுபலி முதல் பாகம் ரூ. 650 கோடி வசூலித்த நிலையில், பாகுபலி 2ஆம் பாகம் ரூ. 1,788 கோடி வசூலித்தது. இதன் மொத்த தொகை ரூ 2,438 கோடி ஆகும். அதேபோல், புஷ்பா முதல் பாகம் ரூ.350.10 கோடி வசூலித்த நிலையில், புஷ்பா 2ஆம் பாகம் ரூ. 1,742.10 கோடி வசூலித்தது. இதன் மொத்த தொகை ரூ 2,092.20 கோடி ஆகும். இவ்விரண்டின் மொத்த வசூலையும் தற்போது துரந்தர் முறியடித்துள்ளது. இதற்கு முன்பு வேறு எந்த இந்தியத் திரைப்படங்களும் உலகளவில் 3,000 கோடி ரூபாயைக் கடந்ததில்லை. குறிப்பாக, 'துரந்தர்' இரண்டு பாகங்களும் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் இந்தியத் திரைப்படங்களாகும்.