நடிகர் விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் கடந்த 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஏழு நாடுகளில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ராதிகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முழு படப்பிடிப்பு முடித்தும் இன்னும் தயாரிப்பாளர் பிரச்சனை, தொழில்நுட்ப சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் படம் வெளியாகமால் இருக்கிறது.
இடையிடையில் டீசர்கள் மட்டும் வந்து போனாலும் மூன்று ஆண்டுகளாக படம் வெளியாகவில்லை. துருவ நட்சத்திரம் படத்தை எப்போது திரையில் காண்போம் என்று எதிர்பார்த்து ஓய்ந்தே விட்டார்கள். ரசிகர்கள். இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும், இப்படத்தின் ’ஒரு மனம்’ பாடல் விரைவில் வெளியாகும் என்று கெளதம் மேனனும் சோனி நிறுவனமும் கடந்த வாரம் அறிவித்திருந்தார்கள்.
அதன்படி, நேற்று இரவு கெளதம்மேனன் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை எழுதியிருக்கும் பாடலை கார்த்திக், சாஷா திரிபாதி பாடியுள்ளார்கள். இதுவரை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்படாலை பார்த்து ரசித்துள்ளனர்