துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம் முகநூல்
சினிமா

“துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட முடியவில்லை; மன்னிக்கவும்” - கௌதம் வாசுதேவ் மேனன் வருத்தம்!

PT WEB

நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் அது மீண்டுமொருமுறை தள்ளிப்போயுள்ளது.

துருவ நட்சத்திரம்

இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ் மேனன். அதில் “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. என்றாலும் எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது. இன்னும் சில தினங்களில் வருவோம்” என்று பதிவிட்டுள்ளார் அவர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம், ஐஷ்வர்யா ராஜேஷ், ரீது வர்மா, சிம்ரன் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக இருந்தது.

இந்நிலையில் சிம்புவின் படத்திற்காக ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை (ரூ.2 கோடியே 40 லட்சம்) இன்று காலை 10.30 மணிக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டுமென இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு கொடுக்காவிட்டால் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக்கூடாதென்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது பட ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

வழக்குப் பின்னணி:

இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “சிம்புவை நாயகனாக வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்குவதற்காக கௌதம் வாசுதேவ் மேனன் எங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதற்கு முன்பணமாக கடந்த 2018ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை.

எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, “துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்றதன் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ள போதிலும், எங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவில்லை” என கூறினார்.

கௌதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, ”படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் எனவும் அவர்கள் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

நேற்று நடந்த இந்த வாதங்கள் அனைத்தையும்கேட்ட நீதிபதி, “நாளை (நவம்பர் 24) காலை பத்தரை மணிக்குள் கௌதம் வாசுதேவ் மேனன், 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடு என எங்கும் வெளியிடக்கூடாது” என உத்தரவிட்டார்.

பணம் கொடுக்க முடியாததால், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது.