Bison Dhruv
சினிமா

தமிழில் ஏன் அதிகமாக சாதி சார்ந்த படங்கள் வருகிறது? - தெளிவாக துருவ் சொன்ன பதில் | Dhruv | Bison

’இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் சமூக சூழல் இன்னும் சாதியம் சார்ந்த பிரச்சனைகளால் நிறைந்திருக்கும் போது, இப்படியான படங்கள் மிக அவசியமானவை’ - துருவ்.

Johnson

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இப்படத்தின் தெலுங்குப் பாதிப்பு அக்டோபர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தனர் படக்குழு. இதில் துருவிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட, அதற்கு அவர் அளித்த பதில்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

"சினிமாத் துறையில் எப்போதும் நெப்போட்டிசம் பற்றிய விமர்சனங்கள் இருக்கும். ஒரு ஸ்டார் கிட் ஆக இதனை எப்படி பார்க்கிறீர்கள்?"

"நான் ஸ்டார் கிட் என்பது உண்மையே. எனக்கு அதன் பொருட்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் மக்கள் என்னை விரும்புவதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள, உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்த போது, எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு நடிகர் வந்திருந்தால் எப்படி உழைத்திருப்பார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன்."

Bison

"சாதியம் இந்தியாவின் எல்லா இடத்திலும் உள்ள ஒன்றே. ஆனால் தமிழ் சினிமா, மற்ற மொழி சினிமாக்களை விட அதிகமாக சாதியம் சார்ந்த படங்களை உருவாக்குகிறீர்கள். அது ஏன்?"

"மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் என்ன கடந்து வந்தாரோ, அதனையே சினிமாவாக எடுக்கிறார். ஒவ்வொரு இயக்குநருக்கும் அவருக்கு தோன்றும் வகையில் அவரின் கலையை நிகழ்த்தும் உரிமை இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் சமூக சூழல் இன்னும் சாதியம் சார்ந்த பிரச்சனைகளால் நிறைந்திருக்கும் போது, இப்படியான படங்கள் மிக அவசியமானவை. இவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதும், இன்னும் இத்தகைய கொடுமைகள் இருக்கிறது என சொல்லுவதும் அவசியம். இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க சினிமா என்ற ஊடகம் சிறந்த ஒன்று" என்றார்