சினிமா

தயாநிதி அழகிரியின் ’மாஸ்க்’ குறும்படம்: மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது யார் தெரியுமா?

தயாநிதி அழகிரியின் ’மாஸ்க்’ குறும்படம்: மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது யார் தெரியுமா?

sharpana

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி இயக்கியிருக்கும் ’மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் நாளை வெளியிடுகிறார்கள்.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான விஷயங்களையே காமெடியாகவும் கருத்தாகவும் கிண்டலடித்து சிந்திக்க வைத்தது சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம். எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன், இப்படத்தை தயாரித்து ’இளம்’ தயாரிப்பாளாராக சினிமாவிற்குள் நுழைந்தார் தயாநிதி அழகிரி.

அதற்கடுத்ததாக, மதுரை பின்னணியைக் கொண்ட தூங்கா நகரம், அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா என தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தயாரித்தார். தயாநிதி அழகிரி தற்போது ‘மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநர் என்ற புதிய முகத்திலும் முத்திரைப் பதிக்கவுள்ளார். ’கொரோனா சூழலில் மாஸ்க் எப்படி மக்களின் அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளதோ அதேபோல்தான், மாஸ்க் குறும்படமும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான குறும்படம்.

இன்றைய கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ள பேருதவியாக இருந்தன.பலவகையிலும்  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு  உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப்  பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க்” என்று கூறினார், தயாநிதி அழகிரி.

இந்நிலையில், மாஸ்க் குறும்படத்தின் மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு ’யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் வெளியிட இருக்கிறார்கள்’ என்பதை தயாநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவருமே முன்னணி இசையமைப்பாளர்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன