தர்மதுரை படத்தின் 100 ஆவது நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை வழங்கினர்.
கேடயத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை மனமகிழ்ந்து வாழ்த்தினார். ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் தர்மதுரை படத்தின் படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் ஆகியோரை பற்றியும் படத்தின் அம்சங்களை குறிப்பிட்டும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். வில்லனாக நடிக்கும் போது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த வாய்ப்பை ஆர்.கே. சுரேஷ் சரியாக பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாரை தப்பட்டை, மருது போன்ற படங்களில் ஆர்.கே.சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடனான சந்திப்புக்கு பிறகு பேசிய சீனு ராமசாமி ‘முள்ளும் மலரும் காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டுகளை பெற்றதும் வாழ்நாளின் மிகச் சிறந்த பரிசு என்று கூறியுள்ளார். மேலும் உண்மையான தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வழங்கியதில் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.