வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக தயாராகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நாளை வெளிவருகிறது. அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என திரைபட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணி முதல்முறையாக இணைந்த படம் பொல்லாதவன். கடந்த 2007-ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷை வைத்து ‘ஆடுகளம்’ என்ற படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பிலிம் பேர் விருது உள்பட பல தேசிய விருதுகளை இப்படத்திற்காக தனுஷ் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலேயே தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படம் வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், பல்வேறு பிரச்னைகளால் படம் தள்ளிக்கொண்டே சென்றது. பின்னர் படிப்படியாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சென்சாருக்கு படம் அனுப்பப்பட்ட நிலையில் படத்திற்கு ஏ சான்றிதழே கிடைத்தது. இந்நிலையில் படம் நாளை வெளிவருகிறது.
இதனிடையே படம் குறித்த சில தகவல்களும் வெளியே கசிந்துள்ளன. அதாவது மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் படத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு சில மிக மோசமான வார்த்தைகளையும் படத்தின் அதிகப்படியான காட்சிகளில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு, படக்குழுவை அப்படிப்பட்ட வார்த்தைகளை கட்டாயமாக மியூட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக திரைப்படங்களில் புகையிலை பிடிப்பது போன்றோ, அல்லது மது அருந்துவது போன்றோ காட்சிகள் வந்தால் அதுகுறித்த விழிப்புணர்வு வாசகம் படத்தின் கீழே இடம்பெறும். இந்நிலையில் வடசென்னை படத்தில் இடம்பெற்றுள்ள மோசமான வார்த்தைகளை காட்சிப்படுத்தும்போது அதனை மியூட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அந்த சமயத்தில் வார்த்தைகள் பிரயோகம் இல்லாமல் படம் காட்சிப்படுத்தப்படும்.
இதுமட்டுமின்றி தமிழத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ற வார்த்தையும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையும் மியூட் செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தின்போது அவரின் ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிடுவது போன்ற காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தாக கூறப்படுகிறது. அந்த காட்சியை தூக்கிவிட்டு வேறு காட்சியை வைக்கவும் சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் வடசென்னை படம் ஜெயலலிதா, எம்ஜிஆரை தவறாக சித்தரிக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இப்போதே சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.