சினிமா

பிரித்விராஜ் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

பிரித்விராஜ் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

webteam

மலையாளத்தில் ஹிட் அடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன், அன்னா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. முன்னாள் ராணுவ அதிகாரிக்கும், போலீசாருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருக்கும். சச்சி இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் பிரித்விராஜ் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித்து இருப்பார். இப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தயாரித்தவர் ஆவார். மலையாளத்தில் ஹிட் அடித்த படம் என்பதால் தமிழிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்க போகிறார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் தனுஷுடன் கைகோர்த்த தயாரிப்பாளர் என்பதால் இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கார்த்திக் நரேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.