தேசிய விருது விவகாரத்தில் திறந்த மனதுடன் பேசிய தனுஷ், ராயன் படத்திற்கு விருது கிடைத்ததை ஏற்றுக்கொண்டாலும், சில விஷயங்கள் முயன்றாலும் அமையாது, இந்த முறை அமைந்தது என கூறினார். தன்னை விமர்சிக்காமல் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட அவர், அஜித் வசனத்தை மேற்கோள் காட்டி, “நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குறவரைக்கும் உன்ன யாராலயும் தோற்கடிக்க முடியாது” என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ராயன் படத்துடன் வெளியான மஹாராஜா, அமரன் போன்ற படங்களுக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில், அப்படங்களை கடந்து ராயன் படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் பங்கேற்ற தனுஷ், ராயன் திரைப்படத்தை விட தேசிய விருதுக்கு தகுதியான படங்கள் இருந்தது. அந்தப் படத்தின் ரசிகர்களின் எண்ணங்களை நான் மதிக்கிறேன் என கூறினார்.
மேலும் தேசிய விருது தானாக கிடைத்தது என்று கூறிய தனுஷ், “சில விஷயங்கள் எவ்வளவு முயன்றாலும் அமையாது. இந்த முறை அமைந்தது, விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு ஏன் தேசிய விருது என்று கேட்பவர்கள், என்னுடைய கர்ணன், புதுப்பேட்டை, வடசென்னை போன்ற படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என ஏன் கேட்கவில்லை. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது பெருமை. தட்டிவிடாதீர்கள், என்னை தட்டிக்கொடுங்கள்” என பேசியிருந்தார்.
தொடர்ந்து அஜித் பேசிய வசனத்தை சுட்டிக்காட்டிய தனுஷ், “நம்ம தல அஜித் சார் சொன்ன மாதிரி தான்.. நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குறவரைக்கும் உன்ன யாராலயும் தோற்கடிக்க முடியாது.. என்ன பேபி.. If you are bad.. I'm Your Dad..” என கூறினார்.