தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு சென்னையிலும், ட்ரெய்லர் வெளியீடு கோவையிலும் நடத்திய படக்குழு, மதுரையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை நேற்று மாலை நடத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் "கிட்டத்தட்ட 8, 9 வருடங்களுக்குப் பிறகு மதுரை வருகிறேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான காரணத்தை முதலில் சொல்கிறேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும், இந்தப் படத்தில் வருவது போலவே பிழைக்க சென்னைக்கு கிளம்பினார்கள். ஆனால் பஸ்ஸுக்கு காசு இல்லை. எனவே மதுரையில் உள்ள சொந்தக்காரர் ஒருவரிடம் சென்னை செல்ல காசு வாங்க வேண்டும். ஆனால், மதுரை வரவும் காசு இல்லை. அப்போது செல்வராகவன் சாருக்கு 4வயது இருக்கும். என் அம்மா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார். மலிங்காபுரம் டூ மதுரை கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் நடந்தே வந்தார்கள். அப்படி அவர்கள் கால்கடுக்க நடந்து வந்து ஏறியிருக்கும் மேடைதான் இந்த மேடை. இங்கு விசிலடித்து, கைதட்டும் நீங்கள் என்னைக் கூட விடுங்கள், என் அப்பாவை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு, இந்த மேடைக்கு வாருங்கள். உழைத்து இங்கு வாருங்கள்.
நான் ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக மதுரையில் 300 தினங்கள் தங்கி இருந்தேன். இந்த மதுரையில் நான் ஓடாத, ஆடாத தெரு கிடையாது. திருப்பரங்குன்றத்தில் 30 நாட்கள் இருந்தேன். எனக்கு மனதிற்கு நெருக்கமான நாட்கள் அவை. வேளையில் பல மன அழுத்தம் இருந்தாலும் இங்கிருந்த நாட்கள் மிக நிம்மதியாக இருந்தேன். ஒத்த சொல்லால பாடல் படப்பிடிப்பின் போது, மதுரை வீதிகளில் இறக்கிவிட்டு ஆட சொல்வார்கள். ஆனால் அப்போது யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஊரில் ஒரு ஆள் போல நான் இருக்கிறேன் என நினைத்து சந்தோஷப்பட்டேன். நான் இந்த மண்ணை சேர்ந்தவன் தானே, அப்படித்தானே இருப்பேன். ஆடுகளம் வெளியான போது மதுரையில் தான் FDFS பார்க்க வேண்டும் என இங்கு வந்து தமிழ்ஜெயா தியேட்டரில் பார்த்தேன். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.
`இட்லி கடை' ஒரு சாதாரண, எளிமையான படம். ஆனால் நீங்கள் குடும்பமாக பார்த்து ரசிக்கும்படியான படமாக இருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அத்தனை கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. அருண் விஜய் சார் கதை கூட கேட்காமல் நடிக்க சம்மதித்தீர்கள். அவர் ரெட்ட தல என்று ஒரு படம் நடித்திருக்கிறார். 30 நிமிடங்கள் அப்படத்தை பார்த்தேன். மிக சிறப்பாக இருந்தது. பார்த்திபன் சார் நீங்கள்தான் செல்லும் இடத்தில் எல்லாம், உங்களுடையது சின்ன கதாப்பாத்திரம் என சொல்லி வருகிறீர்கள். நீங்களே படம் பார்க்கும் போது தெரியும் அது சின்ன கதாப்பாத்திரம் அல்ல. மக்கள் சொல்வார்கள் அப்போது உங்களுக்கு தெரியும்.
இளவரசு சார், நாம் திருவிளையாடல் படத்தில் இணைந்து நடித்தோம். என் மனத்துக்குப் பிடித்த முத்துகிருஷ்ணனாய் நடித்தீர்கள். உங்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. சொந்த ஊர்காரருடன் சேர்ந்து பணியாற்றிய சந்தோசம் கிடைத்தது. உங்களுடைய பாத்திரத்திற்கு நான் எழுதிக் கொண்டே இருந்தேன், கேட்ட போதெல்லாம் வந்து நடித்தீர்கள்.
எண்ணம் போல் வாழ்க்கை. உங்களுடைய எல்லோரின் எண்ணமும், குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் இருக்க வேண்டும். அரங்கில் இருந்த ரசிகர்கள் வடசென்னை 2 என கத்த "வடசென்னை 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும். அதற்கு அடுத்த ஆண்டு படம் வெளியாகும். மதுரை மக்களுக்கும், ரசிகர்களுக்கும், என் ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.