சினிமா

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு?

webteam

நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

மித்ரன் ஆர் ஜவஹர் எழுத்து இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. வழக்கமான கதையம்சம் கொண்ட படம்தான் என்றாலும், பாரதிராஜா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், தனுஷ் ஆகியோரின் கிளாஸான நடிப்பால், பார்ப்பவர்களை படம் கவர்ந்துவிடுகிறது. குறிப்பாக பாரதிராஜா, நித்யாமேனனின் நகைச்சுவைகள் படத்திற்கு பெரும்பாலும் பங்களித்து இருக்கின்றது.

‘வேலையில்லா பட்டதாரி’, ‘3’ படங்களின் இசைவாடை அடித்தாலும், இந்தப் படத்தில் அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. ஆக்ஷன் அதிரடிப் படங்களாக வந்துக்கொண்டிருந்தநிலையில், இந்தப் படம் ஃபீல்குட் படமாக இருப்பதால் திரையரங்குகள் நிறைந்தே காணப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் அதிகரித்தே காணப்படுகின்றது.

40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 4 நாட்களில் சுமார் 50 கோடி ரூபாயை வசூலை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இந்தப் படம் 36.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 44.74 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.