சினிமா

பா பாண்டி-க்கு பிறகு மீண்டும் இயக்குநராக தனுஷ்! முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால்

webteam

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார் தனுஷ். காதல் கொண்டேட், திருடா திருடி என ஜெட் வேகத்தில் நடிகராக வளர்ந்தார். இப்படி இருக்கையில் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் பின்னணி பாடகராக அவரை அறிமுகம் செய்தார் யுவன் சங்கர் ராஜா. பின்னர் வுண்டர் பார் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 3 படத்தையும் தயாரித்தார். அதேபோல் பாடகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். அந்த வரிசையில் பா பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

இயக்குநராக தன்னுடைய தந்தைக்கு ஒரு காலத்தில் வாய்ப்பு கொடுத்த ராஜ் கிரனை ஹீரோவாக வைத்து 2017 ஆம் ஆண்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். எப்படி ஹீரோ, பாடகர், பாடலாசிரியர் என தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டினாரோ, அதேபோல் இயக்குநராகவும் பா பாண்டி படத்தில் தடம் பதித்தார். பா பாண்டி திரைப்படம் ஒரு ஃபீல் குட் ரகத்திலானது. பாடல்கள் அனைத்து அற்புதமாக அமைந்தது. தனுஷூம் ராஜ் கிரனின் சிறுவயது வேடத்தில் நடித்திருந்தார்.

ஐந்து வருடத்திற்குப் பின் மீண்டும் இயக்குநராக மாறுகிறார் தனுஷ். 

இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் தனுஷுடன் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விஷ்ணு விஷால் மட்டுமே அவரது கதாபாத்திரத்திற்கு இறுதி செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பாக தகவலை கூற அவர்மறுத்துவிட்டார். மேலும், கட்ட குஸ்தி வெற்றி அடைந்துள்ள நிலையில், விஷ்ணு விஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ரஜினிகாந்த்துடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனுஷ், அருண் மதேஷ்வரன் இய்யகி வரும் கேப்டன் மில்லரில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படம் முடிந்த பின்பே தனுஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக, அதிதி ராவ் மற்றும் நாகர்ஜுனுடன் படம் ஒன்றினை இயக்க தனுஷ் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், வெவ்வேறு காரணத்தினால் அப்படம் நடைபெறவில்லை. இப்பொழுது, ஐந்து வருடம் பிறகு தன்னுள் இருக்கும் இயக்குநருக்கு உயிர் கொடுத்துள்ளார் தனுஷ். 

இப்படம் 1980களில் நடைபெறுவதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியத்தில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் வெளியீட்டிற்காக தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- சுஹைல் பாஷா