தனுஷ் கோப்புப் படம்
சினிமா

ரஜினி, சூர்யா படங்களுடன் மோதலை தவிர்க்கும் தனுஷ்! தள்ளிப்போகும் ஓம் திரைப்படம்!

ரஜினி, சூர்யா படங்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ‘ஓம்: Chapter 1’ வெளியீட்டை தள்ளிவைத்துள்ளார் தனுஷ்.

PT WEB

தனுஷ் நடிக்கும் ‘ஓம்: Chapter 1’ படம், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ மற்றும் சூர்யா தீபாவளி படங்களுடன் மோதலை தவிர்க்க வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளது.

செய்தியாளர் - M> மீரா

நடிகர் தனுஷின் அடுத்த படமான ஓம்: Chapter 1’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதியில் படம் வெளியாகாது என தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு அடுத்த நாளே ஓம்: Chapter 1 படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் இரு பெரிய படங்கள் வெளியாவதைத் தவிர்க்கும் வகையில், தனுஷ் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளார்.

இதுகுறித்து X தளத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், ரஜினிகாந்த் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டிலும் ‘ஓம்: Chapter 1’ இடம்பெறாது என தனுஷ் உறுதி செய்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யாவின் படம் ஏற்கெனவே வெளியாகும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தேதியையும் தவிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனுஷ், “சூர்யா சார் படத்தின் வெளியீட்டு தேதி முதலில் அறிவிக்கப்பட்டது. பெரிய படங்கள் ஒன்றுக்கொன்று புரிதலுடனும் மரியாதையுடனும் செயல்பட வேண்டும். திரைத்துறை மற்றும் ஒட்டுமொத்த சினிமாவின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

OM chapter 1

‘ஓம்: Chapter 1’ படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதின் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.