ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியில், நடிகர் அஜீத் ஆலோசனை வழங்கிய தக்ஷா குழு இரண்டாம் இடம் பிடித்தது. இதனையடுத்து அந்தக் குழுவின் பேராசிரியர் அஜீத்தை சந்தித்து அதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தான் ஒரு நடிகர் என்றாலும் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் அஜித்குமார். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்து பணியாற்றினார். அதன்படி அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்திற்கான போட்டியில் கல்லூரி அளவில் அஜித்தின் தக்ஷா அணி முதல் இடத்தைப் பிடித்தது. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டிக்கு தகுதிபெற்றது.
Read Also -> தமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' ! பெருகும் ஆதரவு
நீண்ட நேரம் பறத்தல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நட்டத்தப்பட்ட இந்தப் போட்டியில் உலக அளவில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அடுத்தடுத்த படிக்கு முன்னேறிய தக்ஷா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது. அஜித்தின் அணி உலக அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் வெற்றிக்கான சான்றிதழை பெற்ற தக்ஷா குழுவின் பேராசிரியர் செந்தில்குமார், அதனை அஜித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.